இன்று (25.03.2021) சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 70 குழுக்கள், வரும் மார்ச் 31ஆம் தேதி வரை தபால் வாக்குகளை சேகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 80 வயதான 6,992 பேரிடமும், 308 மாற்றுத்திறனாளிகளிடமும் என மொத்தம் 7,300 பேரிடம் (சென்னையில் மட்டும்) தபால் வாக்குகள் பெறப்பட உள்ளன. ஒவ்வொரு நாளும் ஒரு குழு சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று ஒருநாளைக்கு 15 தபால் வாக்குகளைப் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் வாக்குகள் தொடர்பாக திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். ‘தபால் வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் இதுவரை வழங்கவில்லை. தபால் வாக்கு பட்டியலை தராமலே தபால் வாக்கு சேகரிக்கும் பணி சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது’ என அவர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ள நிலையில், உயர் நீதிமன்றம் இதை நாளை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள இருக்கிறது.
அதேபோல் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பித்தோரின் பட்டியலை மார்ச் 29ஆம் தேதிக்குள் தர வேண்டும் என ஏற்கனவே உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், “சென்னையில் தபால் வாக்குப் பதிவு வீட்டில் ரகசியமாகவே நடத்தப்படும். ஒருவர் இரண்டு முறை தபால் வாக்கைப் பதிவு செய்யத் தவறினால், அவர் ஏப்ரல் 6ஆம் தேதி நேரடியாக ஓட்டு போட முடியாது. தபால் வாக்கை மார்ச் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். அதற்குப்பின் அவகாசம் கிடையாது” என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.