கடலூர் மாவட்டம், விருத்தாசலம், ஆலடி ரோட்டில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள செயல்படாத செராமிக் கம்பெனி குடோனின் பின்புறம் ஒரு மினி லாரி தார்ப்பாயால் மூடப்பட்டு மர்மமான முறையில் உள்ளதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதையடுத்து இன்று அதிகாலை அங்குச் சென்ற குற்ற நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் மற்றும் விருத்தாசலம் காவல்துறையினர் லாரியைச் சோதனை செய்தனர். அப்போது, அந்த லாரியில் அனுமதி பெறாமல், சட்டவிரோதமாக சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் குடோனை திறந்து பார்த்தபோது மேலும் அதிர்ச்சியடைந்தனர். அந்த குடோனில் சட்டவிரோதமாக ரேஷன் பொருட்களைக் கடத்தி வந்து, பாலிஷ் செய்து வேறு சாக்குப் பையில் அடைத்து இட்லி அரிசி எனப் பெயரிடப்பட்டு அதனைக் கடத்திச் சென்று வெளியூரில் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. அந்த குடோனில் இருந்த 156 மூட்டை ரேஷன் அரிசி, 58 மூட்டை ரேஷன் கோதுமை மற்றும் ஒரு பிரபல தனியார் நிறுவனத்தின் பெயர் அச்சடிக்கப்பட்ட இட்லி அரிசி பாக்கெட்டுகள் அடங்கிய கோணி சாக்குகள், மற்றும் மூட்டைகளை தைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பொருள்கள் இருந்தது. அவற்றை எல்லாம் பறிமுதல் செய்த போலீசார், குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறைக்கும் தகவல் அளித்தனர். அவர்கள் உடனடியாக விரைந்து வந்து ரேஷன் பொருட்கள் ரேஷன் கடைகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டவையா? அல்லது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனிலிருந்து கொண்டுவரப்பட்டவையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேசமயம் கடத்தல் பட்டாசு இருந்த மினி லாரியை கைப்பற்றி அதில் உள்ள முகவரி மூலம் லாரி டிரைவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம், விருத்தாசலம் பாலக்கரை இறக்கத்தில் உள்ள ஒரு தனியார் பட்டாசு கடையில் அளவுக்கு அதிகமாகப் பட்டாசு விற்பனை செய்யப்படுவதாகக் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சக்திகணேசனுக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்குச் சென்று சோதனை மேற்கொண்டபோது, அனுமதிக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக வைக்கப்பட்டிருந்ததாக சுமார் 25 லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அங்குப் பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளைச் சிவகாசிக்கு அனுப்பும்படியும் உத்தரவிட்டார். அதன்படி மினி லாரிகளில் ஏற்றி சிவகாசிக்கு எடுத்துச் சென்ற பட்டாசு லாரி இதுவா என்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்றுமுன்தினம் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில், அளவுக்கு அதிகமாக ஒரு கடையில் பட்டாசுகள் வைத்திருந்ததால் தீ விபத்து ஏற்பட்டு 7 பேர் உயிர்ப் பலியாகினர். அச்சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.