தேனி மாவட்டம், பெரியகுளம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊராகும். இந்த நகராட்சியின் 6- வது வார்டில் சகுந்தலா என்பவருக்கு அ.தி.மு.க. சார்பில் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட அக்கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது.
இந்த நிலையில் தேர்தலில் நிற்க வாய்ப்பு வழங்கப்பட்ட சகுந்தலா என்பவர் தே.மு.தி.க.வில் இருந்து விலகி அ.ம.மு.க.வில் இணைந்துள்ளார். பின்னர், கடந்த 10 மாதங்களுக்கு முன்பாக அ.ம.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார். மேலும் அவருக்கு அ.தி.மு.க. கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டை கூட பெறாத நிலையில், தற்பொழுது பெரியகுளம் நகராட்சியின் 6- வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரியகுளம் நகராட்சியில் அ.தி.மு.க.வின் 6- வது வார்டு செயலாளர், இணைச் செயலாளர், பிரதிநிதிகள், மேலவை பிரதிநிதி உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த பெத்தனசாமி, லதா, நாகராஜன், முருகன், சீத்தாலட்சுமி, லட்சுமி, அர்ஜுன் உள்ளிட்ட 9 பேரும் அ.தி.மு.க.வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கூண்டோடு ராஜினாமா செய்வதாக அறிவித்து பெரியகுளம் நகர செயலாளரிடம், தங்களது ராஜினாமா கடிதத்தையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டையையும் கொடுத்துள்ளனர்.
இது குறித்து ராஜினாமா செய்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், அ.தி.மு.க. கட்சி நகர் மற்றும் மாவட்ட நிர்வாகிகளிடம் கட்சியில் நீண்ட காலமாக உள்ள கட்சி தொண்டருக்கு வாய்ப்பு வழங்க பல முறை கேட்ட நிலையில் வார்டு பொறுப்பாளர்களைக் கேட்காமல் தற்பொழுது 6- வது வார்டுக்கு அ.தி.மு.க. வேட்பாளரை அறிவித்துள்ளனர்.
கட்சி பொறுப்பில் உள்ளவர்களின் கோரிக்கையை ஏற்காததால் கட்சி பொறுப்பு தேவை இல்லை என முடிவெடுத்து ஒட்டு மொத்தமாக அ.தி.மு.க. கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளோம். ராஜினாமா செய்த பொறுப்பாளர்களில் ஒருவரான சேர்ந்த லட்சுமி என்பவரை சுயேட்சை வேட்பாளராகத் தேர்வு செய்தோம். அவர் இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்" என்றனர்.