சென்னை கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் அருகில், என்.எஸ்.கே. சாலையில், நகரின் மையப்பகுதியில் செயல்பட்டு வந்தது, மாநகராட்சி சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட வணிக வளாகம்.
1994-95 காலகட்டத்தில் கட்டப்பட்ட இந்த வணிக வளாகத்தில் இரண்டு தளங்களில் 112 கடைகள் உள்ளன. இதில் பிளைவுட் கடைகள், மெடிக்கல், ஆப்டிக்கல், பெட்டிக்கடை, மளிகைக்கடை, எலக்ட்ரிக்கல் ஒர்க்ஸ் ஷாப், கோழிக்கறி கட்டை, பத்திரிகை அலுவலகம் என பலதரப்பட்ட கடைகளும் செயல்பட்டு வந்தன. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு முன் தேதியிட்ட அறிவிப்பு ஒன்றை ஒட்டி, மாநகராட்சி நிர்வாகிகள் இந்த வணிக வளாகத்திற்கு சீல் வைத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
”இந்தக் கட்டிடம் கட்டப்பட்ட 25 ஆண்டுகளில் பாழடைந்து போனது. இதில் கட்டுமானத்தில் சிக்கல், குளறுபடிகள் நடந்திருக்கலாம். அதேசமயம், மாநகராட்சி இதனை முறையாகப் பராமரிக்க முன்வரவில்லை” என்று இந்த வணிக வளாகத்தில் கடை நடத்துபவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் அவர்கள், “கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பே, இந்தக் கட்டிடம் பயன்படுத்த லாயக்கற்றது என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்தது. அப்போது முதலாகவே, கட்டிடத்தை பராமரிக்கும் முழுப்பொறுப்பையும் மாநகராட்சி நிர்வாகம் தட்டிக் கழித்தது.
தொடர்ந்து இந்த இந்தக் கட்டிடத்தின் காரைகள் பெயர்ந்து விழுவது மற்றும் கழிவறைகள் சிதிலமடைந்திருப்பது உள்ளிட்ட பிரச்சனைகளைப் பற்றி ஆதாரங்களோடு மாநகராட்சியிடம் முறையிட்டபோதும், பொதுப்பணித்துறையின் எச்சரிக்கையைச் சுட்டிக்காட்டி பராமரிக்க முடியாது, கடைகளைக் காலி செய்யுங்கள் என மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துவிட்டனர்.
வாடகை ஒழுங்காக செலுத்தவில்லை, பெரும்பாலான கடைகளில் வாடகைக்கு இருப்பவர்கள், வேறு நபர்களுக்கு கூடுதல் வாடகைக்கு விட்டிருக்கிறார்கள் என்று மாநகராட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டுகிறார்கள். அதேசமயம், பல ஆண்டுகளாக மாநகராட்சி நிர்வாகம் இந்தக் கட்டிடத்திற்கான வாடகையை வசூலிப்பதில்கூட மெத்தனம் காட்டியது. சில சமயங்களில் மொத்தமாக வாடகை செலுத்தவில்லை என நோட்டீஸ் வந்தாலும், அதைச் செலுத்தச் சென்றால், போதிய அக்கறை காட்டுவதில்லை. கண்டுகொள்ள மாட்டார்கள் என்று இங்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக கடை வைத்திருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கான காரணம் கேட்டால், மாநகராட்சி தீர்மானத்தின்படி, வாடகை உயர்த்தப்பட்ட கட்டணம் இது என்று விளக்கம் அளிப்பார்கள். நிலுவையை முழுமையாக அடைத்த பின்னர்தான் மாத வாடகை வசூலிப்போம் என்பார்கள். இதன் காரணமாகவே முறையாக வாடகை செலுத்தத் தவறியவர்கள் பலர் என்பது அவர்களின் குற்றச்சாட்டு.
மாத வாடகையை முறையாக வசூலிப்பதையும், மாநகராட்சியுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. அதேசமயம், அதை திடீரென்று அவசரகதியில் செய்யவேண்டிய தேவை என்ன? கட்டிடம் பாழடைந்ததுதான் பிரச்சனை என்றால், அதே இடத்தில் புதிதாக ஒரு கட்டிடம் எழுப்பினால், அங்கே ஏற்கனவே கடை வைத்திருந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவார்களா? இல்லையெனில், இந்த இடத்தை மாநகராட்சி என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுகிறது.