Skip to main content

விதியை மீறிய வியாபாரிகள்... 7 இறைச்சி கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் அதிரடி...!

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

கரோனா பரவலைத் தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்திய மோடி அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகினர். அதனைத் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்க நேரக் கட்டுப்பாடு தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

 

 Sealed for 7 meat shops in Thiruvannamalai

 



அதனைத் தொடர்ந்து காலை 6 மணி முதல் மதியம் 2.30 வரை காய்கறி கடைகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள் திறந்து இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 29 ந்தேதி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு காய்கறி கடைகள், இறைச்சி கடைகளில் பெரும் கூட்டம் கூடிவிட்டது. மக்களிடையே சமூக இடைவெளி வேண்டும் என்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இதனால் கேள்விக்குறியானது.

திருவண்ணாமலையில் மீன் சந்தையிலும், ஆம்பூரில் காய்கறி கடைகளிலும், வாணியம்பாடி, ஆம்பூர் உட்பட பல இடங்களில் இறைச்சி கடைகளிலும் கூட்டம் கூடியது அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்தது. வியாபாரிகள் சரியாக விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்களா என அந்தந்த பகுதி நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை நகரில் 6 இடங்களில் காய்கறி சந்தைகளைப் புதிதாக திறந்தார் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி. இதனால் காய்கறி கடைகளில் கூட்டமோ, நெருக்கடியோ கிடையாது. சில இடங்களில் இறைச்சி கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தனர். பல இடங்களில் அதனைக் கடைப்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரணி நகரில் புதிதாக திறக்கப்பட்ட காய்கறி மார்க்கெட் கடைகளில் அளவுகடந்த கூட்டம். ஒரே நேரத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் அந்த மார்க்கெட் பகுதியில் இருந்ததால் பெரும் நெருக்கடி ஏற்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

ஆம்பூரில் 7 இறைச்சி கடைகளில் சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் நின்று கொண்டிருந்தனர். அதனைக் கடை உரிமையாளரும் கண்டுக்கொள்ளவில்லை. இதனைப்பார்த்த வருவாய்த்துறை மற்றும் நகராட்சி சுகாதார அதிகாரிகள், அந்த 7 கடைகளுக்கும் சீல் வைத்தனர். இந்தக் கடைகள் 144 தடை உத்தரவு முடியும் வரை திறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்

 

சார்ந்த செய்திகள்