புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 110 டாஸ்மாக் கடைகளில் 40 க்கும் குறைவான பார்களுக்கு மட்டுதே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அனுமதி இன்றி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி பார்கள் இயங்கி வருகிறது. அது மட்டுமின்றி பெட்டிக்கடைகளில் கூட மது விற்பனை பலமாக நடந்து வருகிறது. இவற்றை கவணிக்க வேண்டிய துறை அதிகாரிகள் மாதம் ஒரு முறை வந்து அந்த அனுமதி இன்றி மது விற்பனை செய்யும் நபர்களிடம் ரகசியமாக சந்திப்பு நடத்திவிட்டு செல்கின்றனர்.
புதுக்கோட்டை நகரில் பல இடங்களில் இதே போல அனுமதி இன்றி பார்கள் இயங்குவதை அறிந்த சார் ஆட்சியர் கே்.எம்.சரயு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரடி சோதனை நடத்தி சீல் வைத்தார். ஆனால் அதன் பிறகும் விற்பனை நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இன்று காலை புதுக்கோட்டை நகரில் டாஸ்மாக் மேலாளர், கலால் அதிகாரி மற்றும் மதுவிலக்கு உதவி ஆய்வாளர் வீரமணி உள்ளிட்ட குழுவினர் நடத்திய சோதனையில் அனுமதி இன்றி நடத்தப்பட்டு வந்த 2 பார்களை பூட்டி சீல் வைத்தனர். அனுமதி இன்றி மது விற்றதாக 5 நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.45 பணம் மற்றும் 510 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
இதே போல மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தினால் மேலும் பல ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்படலாம் என்கின்றனர் பொதுமக்கள்.