தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வலுவடைய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி நோக்கி வரும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 10 சென்டிமீட்டர் மழையும், அண்ணாமலை நகர், கடலூரில் தல 8 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சூறைக்காற்று வீசி வருவதால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலும் இரவு முதல் தொடர்ந்து கனமழை பொழிந்து வருவதால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அசோக் நகர்ப் பகுதியில் தொடர் கனமழை காரணமாகச் சாலைகளில் நீர் தேங்கி வருகிறது. பட்டாளம், புளியந்தோப்பு, சூளை உள்ளிட்ட பகுதிகளிலும் பல இடங்களில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.