கேரள மாநிலத்தின் கடலோர பகுதியில் உள்ள ஆலப்புழை மாவட்டத்தில் நேற்று முன்தினம் (18.12.2021) அடுத்தடுத்து இரண்டு அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அதில், நேற்று முன்தினம் இரவு கேரளா எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.எஸ். ஷான் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தபோது அவரது இருசக்கர வாகனத்தின் மீது காரைக் கொண்டு மோதியதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதை தொடர்ந்து காரில் வந்தவர்கள் இறங்கி வந்து ஷான் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய ஷான், கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நள்ளிரவில் உயிரிழந்தார். இந்தக் கொலைக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ். இருப்பதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் குற்றம்சாட்டி இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக திருச்சியில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளர் ஷான் என்பவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய அனைவரையும் விரைவில் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.