சேலத்தில், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்ட எஸ்.டி.பி.ஐ அமைப்பைச் சேர்ந்த இருவரையும் காவல்துறையினர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் பட்டைக்கோயில் அருகே உள்ள பரமக்குடி நன்னுசாமி தெருவைச் சேர்ந்தவர் ராஜன் (50). ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உள்ள இவர், சிற்பக் கலைஞராக உள்ளார். இவருடைய வீட்டுக் கதவின் மீது கடந்த செப். 25ம் தேதி, மர்ம நபர்கள் சிலர் மண்ணெண்ணெய் குண்டு வீசிவிட்டுச் சென்றனர். குண்டு வெடிப்பு சத்தம் கேட்டு, அதிர்ச்சியடைந்த ராஜன், வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து பார்த்தார். வீட்டு வாசலில் மண்ணெண்ணெய் குண்டு வெடித்துச் சிதறி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அம்மாபேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, காவல்துறையினர் நிகழ்விடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர், ராஜன் வீடு மீது மண்ணெண்ணெய் பாட்டில் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது.
சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த எஸ்.டி.பி.ஐ அமைப்பின் மாவட்டத் தலைவர் சையத் அலி (42), பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த 34வது கோட்ட கிளைத் தலைவர் காதர் உசேன் (33) ஆகியோர்தான் மண்ணெண்ணெய் குண்டு வீசினர் என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.
இது ஒருபுறம் இருக்க, பிடிபட்ட இருவரும் மத ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்ததாகக் கூறி, அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி மாநகர காவல்துறை துணை ஆணையர் மாடசாமி, உதவி ஆணையர் சரவணக்குமார், அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் கணேசன் ஆகியோர் மாநகர ஆணையர் நஜ்மல் ஹோடாவிற்கு பரிந்துரை செய்தனர்.
பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ஆணையர், இருவரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டதன் பேரில், இருவரும் கைது செய்யப்பட்டனர். இதற்கான கைது ஆணை, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள காதர் உசேன், சையத் அலி ஆகியோருக்கு காவல்துறையினர் வழங்கினர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலர் குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.