புதிய கண்டுபிடிப்புகளை கண்டறியும் மாணவர்களை அறிந்து, அவர்களுக்கு தேவையான உதவிகளைச்செய்து அவர்களை உலகறியச்செய்யும் வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது சயின்ஸ் பஜார் அமைப்பு. பல நூறுக்கும் மேற்பட்ட இளம் ஆராய்ச்சியளார்களுக்கு ஊக்கம் தந்து அவர்களின் கண்டுபிடிப்புகளை உலகறியச்செய்துள்ளது இந்த அமைப்பு. புதுப்புது கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கும் நோக்கும் அவ்வப்போது அறிவியல் பூர்வமான போட்டிகளையும் நடத்தி வரும் இந்த அமைப்பு லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த அமைப்பிற்கு கொரியா, இந்தியாவில் மண்டல அலுவலகங்கள் உள்ளன.
சயின்ஸ் பஜாரின் தலைவர் அப்துல் பாசித் சையதுவின் பூர்வீகம் தமிழகம் என்றாலும் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அவர் லண்டனில் வசிப்பதால் அங்கேயே இந்த அமைப்பை துவக்கினார்.
இந்த அமைப்பின் சார்பாக சர்வதேச கருத்தரங்கம் சென்னை பூந்தமல்லியில் பனிமலர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் அமெரிக்கா, ரஷ்யா, லண்டன் நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் பங்கேற்றனர். தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களின் படைப்பாற்றலை உலகுக்கு காட்டும் விதமாக இந்த கருத்தரங்கத்தில் காட்சிக்கு வைத்திருந்தார்கள். கருத்தரங்களில் அவை மிகுந்த வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றன.