தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறிப்பிட்ட அளவில் தொடர்ந்து இருந்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு துரித கதியில் முடுக்கிவிட்டுள்ளது. ஞாயிறு பொதுமுடக்கம், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, இரவு நேர ஊரடங்கு, கோயில்களை விடுமுறை நாட்களில் மூடுவது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் வருகின்ற 31ம் தேதியோடு நிறைவடைய இருக்கிறது.
இந்நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு விரைவில் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசு சார்பாக இன்று மருத்துவர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளோடு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பள்ளிகளைத் திறக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.