தனியார் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பது மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கும் நடவடிக்கைகளை அரசே ஏற்கக் கோரிய மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அகில இந்திய தனியார் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் கே.எம்.கார்த்திக் தாக்கல் செய்த மனுவில், தனியார் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க எந்த நடைமுறையும் இல்லை. மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணங்கள், ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட செலவினங்களைக் கண்காணிக்காததால், 50 சதவீத லாபமானது, பள்ளி மற்றும் கல்லூரி அறங்காவலர்களின் கைகளுக்குச் செல்கிறது. தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு எந்தக் கட்டணச் சலுகையும் வழங்கப்படுவதில்லை.
தற்போது, தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், டீக்கடை நடத்துவது, பூ விற்பனை போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், கட்டணவசூல் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியங்கள் வழங்கும் நடைமுறையை அரசே ஏற்க வேண்டும். மேலும், தனியார் பள்ளி, கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் மூலம் தணிக்கை செய்து, கட்டண விகிதங்களைக் குறைக்க வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.