சென்னையில் தனியார் பள்ளி மாணவன் ஒருவன் கடத்தப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் தேர்வுக்கு பயந்து மாணவன் திட்டமிட்டே தான் கடத்தப்பட்டதாக நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
நேற்று கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த அரவிந்த் சர்மா என்பவர் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், 'கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7 ஆம் வகுப்பு பயின்று வரும் தனது 12 வயது மகன் மிதிலேஷ் குமார் சர்மா ஆட்டோவில் பள்ளிக்குச் செல்வது வழக்கம். எப்பொழுதும் ஆட்டோ ஓட்டுநர் சீனிவாசன் என்பவர் தனது மகனை பள்ளி முடிந்து வீட்டிற்கு அழைத்து வருவார். ஆனால் நேற்று மிதிலேஷை ஆட்டோ அருகே நிறுத்தி வைத்து விட்டு ஆட்டோ ஓட்டுநர் மற்ற மாணவர்களை அழைத்து வரச் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் தனது மகன் ஆட்டோவில் கடத்தப்பட்டார். அதன் பிறகு பச்சையப்பாஸ் காலேஜ் சிக்னல் அருகே ஆட்டோவில் இருந்து வெளியே குதித்த எனது மகன், அங்கிருந்து மெட்ரோ ரயில் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து காவலர் ஒருவரிடம் இருந்து செல்போனை வாங்கி தாத்தாவிற்கு தான் கடத்தப்பட்டதாக கூறினான். பின்னர் அவன் மீட்கப்பட்டான். தற்பொழுது மகன் பயந்து உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறான். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அப்பள்ளியின் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் பச்சையப்பன் கல்லூரி சிக்னலில் இருந்த சிசிடிவி காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் சிறுவன் சொன்னதாகக் கூறப்பட்டது போன்று கடத்தப்பட்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. பின்னர் சந்தேகமடைந்த போலீசார் சம்பந்தப்பட்ட சிறுவன் மிதிலேஷை நேரில் அழைத்து விசாரித்தனர். அப்பொழுது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் தேர்வுக்கு பயந்து பள்ளிக்குச் செல்லமாட்டேன் என பலமுறை பெற்றோரிடம் தெரிவித்ததாகவும், ஆனால் பெற்றோர் தன்னை கட்டாயப்படுத்தி பள்ளிக்கு அனுப்பி வைத்ததால், தான் கடத்தப்பட்டதாக நாடகமாடியதாகவும், அப்படிச் செய்தால் பள்ளிக்கு பெற்றோர்கள் அனுப்ப மாட்டார்கள் என திட்டமிட்டு நடித்ததாகவும் தெரிவித்துள்ளான். பின்னர் மாணவனை எச்சரித்த போலீசார் அவனை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.