நேற்று சென்னை ஆழ்வார் திருநகரில் வெங்கடேஷ்வரா மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்த தீட்சித் என்ற 8 வயது மாணவர் பள்ளி பேருந்து மோதி பள்ளி வளாகத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பள்ளியின் பேருந்து ஓட்டுநர் பேருந்தை வலதுபுறம் நகர்த்த முயன்ற போது பின்னால் நின்றுகொண்டிருந்த மாணவன் தீட்சித் மீது பேருந்தின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே அந்த மாணவன் உயிரிழந்தான்.
இந்த சம்பவம் தொடர்பாக பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். வெங்கடேஷ்வரா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி, பேருந்திலிருந்து மாணவர்களை இறக்கிவிடும் ஊழியர் ஞானசக்தி ஆகிய மூன்றுபேர் மீதும் கொலையாகாத மரணத்தை விளைவித்தல் பிரிவின் கீழ் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பேருந்து ஓட்டுநர் பூங்காவனம் மற்றும் உதவியாளர் ஞானசக்தி ஆகியோருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள வேன் ஓட்டுநர் பூங்காவனம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.