தமிழகத்தில் ஏப்ரல் 6- ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறும். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12- ஆம் தேதி தொடங்குகிறது. மார்ச் 19- ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைகிறது. வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 20- ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுவைத் திரும்பப் பெற மார்ச் 22- ஆம் தேதி கடைசி நாளாகும். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இதனைத் தெரிவித்தார்.
இதனையடுத்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 88,963 வாக்குச் சாவடிகள் உள்ளது. 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. 60%-70% மாவட்டங்களில் வாக்குச் சாவடிகள் முடிவாகிவிட்டன. நாளை தெளிவான வாக்குச்சாவடி பட்டியல் கிடைக்கும்.
வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடாவை தவிர்க்க, மத்திய-மாநில அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவோம். சி-விஜில் (தேர்தல் விதிமுறை மீறலை இணையம் மூலமாகப் புகார் செய்யும் வசதி உள்ளது) மூலமாக வரும் புகார்கள் மீதும் 1950 எண்ணுக்கு வரும் புகார்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் செலவுகளைக் கண்காணிக்க இரண்டு சிறப்புப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இன்று முதல் பணம் கொண்டு செல்லப்படுவது கண்காணிக்கப்படும். இதுவரை 45 கம்பெனி துணை ராணுவத்தினர் தமிழகம் வந்துள்ளனர். டிஜிட்டல் பணப் பட்டுவாடாவைக் கண்காணிக்க ரிசர்வ் வங்கி, மாநில வங்கிகள் உள்ளிட்டவற்றிடம் பேசியுள்ளோம். இதுவரை இல்லாமல், தற்போது திடீரென வங்கி கணக்கிற்கு பணம் வந்தால் அது விசாரிக்கப்படும்.
வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வதற்குக் கடுமையான விதிமுறைகள் இருக்கின்றது. கடந்த முறையும் அதைப் பின்பற்றினோம். அரசியல் கட்சிகளிடமும் அதைச் சொல்லியுள்ளோம். அவர்களிடமிருந்து எந்தப் புகாருமில்லை. ஒரு தனிநபர் 50 ஆயிரம் வரை பணமெடுத்துச் செல்லலாம். அதற்கு மேல் எடுத்துச் சென்றால் உரிய ஆதாரங்கள் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.