தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த மாதம் 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக்கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்து சென்றனர்.
காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலீசார் கூட்டாக சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாக கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இது தொடர்பாக 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ காவலில் விசாரிக்கப்பட்டனர்.
அடுத்த கட்டத்தை நோக்கி சி.பி.ஐ. விசாரணை நகர்ந்து வரும் நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான தலைமை காவலர் முருகன் மதுரை நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வர இருக்கிறது.