மதுரையில் தென்மண்டல காவல்துறை தலைவராக இன்று காலை பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய முருகன், லாக்கப் டெத் என்பது தவிர்க்கப்பட வேண்டியது. அதுதான் காவல்துறை நிலைப்பாடு, காவல்துறையினருக்கு போதுமான அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதை முறையாகப் பின்பற்றினாலே இது போன்ற நிகழ்வுகள் அரங்கேராது.
ஒரு சிலர் தவறு செய்வதால் அது அனைவரையும் பாதிக்கும் என்பது இப்போது செய்தியாக உள்ளது. குற்றத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறை பாதுகாக்காது. சட்டம் தன் கடமையைச் செய்யும்.
தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியான மோதல்கள் 1990 களில் இருந்த அளவிற்குத் தற்போது இல்லை. தற்போது காவல்துறையின் கடுமையான நடவடிக்கையால் குறைந்துள்ளது. அனைத்து மாவட்ட எஸ்.பி. மற்றும் டி.ஜ.ஜி.-யுடன் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தபடும். சைபர் கிரைம் குற்றங்கள் தற்போது தனிநபர் குற்றங்களாக மாறி உள்ளது. மின்னஞ்சல் வழியாக புகார் அளித்தால் போதும். அந்தந்த காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள்.
சாத்தான்குளம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட காவலர்கள் அரசு விதிப்படி 48 மணி நேரம் காவலில் இருந்தாலே சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். பதவி ஏற்பதற்கு முன்பாகவே சாத்தான்குளம் சென்று நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்துள்ளேன். தற்போது மீண்டும் சாத்தான்குளம் செல்ல இருக்கிறேன் எனத் தெரிவித்தார்.