தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு வழக்கில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான காவல் உதவி ஆய்வாளர் பால்துரை கரோனாவால் உயிரிழந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட அன்றே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சர்க்கரை நோய் காரணமாக தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அண்மையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், ஜூலை 24ம் தேதி அவருக்கு கரோனா உறுதியாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 56 வயதான பால்துரை உயிரிழந்தார்.
''என் கணவரின் உயிருக்கு ஆபத்து அவரை காப்பாற்றுங்கள். என் கணவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. அவர் சிறைச்சாலைக்கு சென்ற பின்பு சர்க்கரை நோயின் அளவு அதிகரித்துள்ளது. கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். உறவினர்களையோ என்னையோ உள்ளே விட மறுக்கிறார்கள். அவருக்கு ஏற்கனவே இதய நோய் உள்ளது. அரசு மருத்துவமனை சரியான சிகிச்சை அளிக்கவில்லை. எனவே அவரை நாங்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம். அதற்கு உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என்று பால்துரை மனைவி மதுரை கமிஷனரிடம் மனு கொடுத்திருந்தார். இந்த நிலையில்தான் அரசு மருத்துவமனையில் இன்று காலை மாரடைப்பால் பால்ராஜ் மரணமடைந்துள்ளார்.