சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜா, முருகன் உள்ளிட்ட ஐந்து பேரையும் மூன்று நாட்கள் நீதிமன்ற காவலுக்கு செல்ல மதுரை மாவட்ட தலைமை நீதிமன்ற நீதிபதி ஹேமானந்தகுமார் உத்தரவிட்டதோடு, ஐந்து பேரையும் 16ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் ஆகிய இருவரையும் நாளொன்றுக்கு ஒரு மணி நேரத்திற்கு வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதி அளித்தும் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து ஐந்து பேரும் சிபிஐ ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அதன் பின்னர் சிபிஐ காவல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் இன்று காவலர்கள் ஐந்து பேரும் சிபிஐ அதிகாரிகளால் சாத்தான்குளம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஏற்கனவே காவலர் முத்துராஜ் சாத்தான்குளம் அழைத்து செல்லப்பட்டு இருந்த நிலையில், மற்ற காவலர்களான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர் ராகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோரும் சாத்தான்குளத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
நாளை மாலையுடன் சிபிஐ விசாரணைகான மூன்று நாள் காவல் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.