திருட்டு மணல் அள்ளியதாக டிரைவருடன் மணல் டிராக்டரையும் கைப்பற்றிய காவல்துறை, அதனை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்க நள்ளிரவில் மணலுடன் மாயமாகியுள்ளது அந்த டிராக்டர் என்பது தான் நெல்லை மாவட்டத்தின் ஹாட் டாபிக்கே.!! .
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் துணைச்சரக காவல் நிலையத்திற்குட்பட்டது சின்னக்கோவிலான்குளம் காவல் நிலையம். இந்த காவல் நிலைய எல்கைக்குட்பட்ட செந்தட்டி ஓடையில் அவ்வவ்ப்பொழுது மணல் திருட்டு நடைபெறுவது சகஜமான நிகழ்வுகளில் ஒன்று. இந்நிலையில், ஞாயிறன்று பின்னிரவில் TN 79 D 6642 பதிவெண் கொண்ட டிராக்டரில் சங்கரன்கோவில் காந்திநகரை சேர்ந்த வேல்சாமி மகன் காளிராஜ் மணல் திருடிக் கொண்டிக்க, அங்கு வந்த சின்னக்கோவிலான்குளம் காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ.முருகனும், தலைமைக்காவலர் காமராஜூம் மணல் திருட்டினை உறுதி செய்து, காளிராஜை கைது செய்து, மணலுடன் டிராக்டரையும் கைப்பற்றி சங்கரன்கோவில் டி.எஸ்.பி.அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். சங்கரன்கோவில் டி.எஸ்.பி.ராஜேந்திரனோ, " இதனை அப்படியே தாசில்தாரிடம் ஒப்படைத்து விடுங்கள்." என கட்டளையிட, அவர்களும் அந்த நள்ளிரவில் தாசில்தார் இல்லாமலேயே தாசில்தார் அலுவலகத்தாரிடம் ஒப்படைத்து விட்டு திரும்பியிருக்கின்றனர். இது இப்படியிருக்க, அதிகாலை 4 மணிக்கு டிராக்டர் மணலுடன் மாயமாக, மறுநாள் திங்களன்று காலையில் அலுவலகத்திற்கு வந்த தாசில்தாரும், மணலுடன் டிராக்டரை காணவில்லை என நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தது மிகுந்த பரப்பரப்பினை உருவாக்கியுள்ளது.
"சங்கரன்கோவில் எம்.எல்.ஏ.வும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான ராஜலெட்சுமிக்கு சொந்தமானது தான் காவல்துறையிடம் பிடிப்பட்டு, தாசில்தார் அலுவலகத்திலிருந்து மாயமான TN 79 D 6642 பதிவெண் கொண்ட டிராக்டர். அமைச்சர் ராஜலெட்சுமியின் மாமனார் வேலுச்சாமிக்கு மணல் திருடுவதே பிரதான தொழில். ஆரம்பத்தில் மாட்டுவண்டி மூலம் மணல் கடத்தியவர் இப்பொழுது டிராக்டர் மூலம் மணல் கடத்துக்கின்றார். இது மாவட்டத்திலுள்ள அனைவருக்கும் தெரிந்த ஒன்று..!!! சம்பவத்தன்று, அவரின் டிரைவர் எங்கள் போலீசாரிடம் மாட்டிக்கொள்ள, அமைச்சர் தலையீட்டின் பேரில் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர் போலீசார். அதிகாலையிலேயே டிராக்டரை மணலுடன் மீட்டு சென்றிருக்கின்றது அமைச்சரின் டீம். இது தெரிந்த தாசில்தாரும் நமக்கேன் வம்பு..? எனும் ரீதியில் புகாரைக் கொடுத்துள்ளார். அந்த டிராக்டர் மறுபடியும் திருட்டு மணல் அடிக்க புறப்பட்டுது தான் வேடிக்கை என்றாலும் அசிங்கப்பட்டது என்னவோ காவல்துறை தான்.!!" என்கிறார் டவுனை சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரப்பரப்பை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று.!