அரியலூர் மாவட்டத்தில் அமையவிருக்கும் மணல் குவாரி மாவட்ட மக்களுக்கு அதிகம் பயன்படும்படி திட்டம் வகுத்திட வேண்டும் என திமுக செந்துறை ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கும், வருவாய்த்துறைக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.
அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம், தளவாய், சன்னாசிநல்லூர் ஊராட்சிகளில் 4 இடங்களில் நவம்பர் மாதத்திலேயே மாட்டு வண்டிகளுக்கு மணல் அள்ள அரசு குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது வரவேற்கத்தக்கது, மாட்டு வண்டி உரிமையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியமைக்கு நன்றி.
குவாரிகளுக்கு செல்லும் பாதையைச் சீரமைத்தல், செக்போஸ்ட் அமைத்தல், மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பொதுப்பணித்துறை விரைந்து செய்து முடித்து குவாரியை உடனே திறந்திட ஆவண செய்ய வேண்டும்.
சென்ற முறை குவாரிக்கு அனுமதி கொடுத்தபோது வேறு மாவட்டங்களிலிருந்து வந்த நூற்றுக்கணக்கான மாட்டு வண்டி உரிமையாளர்கள் மணலை அள்ளி சென்றனர். இதனால் உள்ளூர் மாட்டு வண்டி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டனர். உள்ளூர் பயனாளிகளும் பாதிக்கப்பட்டனர். மேலும் இரண்டாம் விற்பனையும் நடைபெற்றது.
இது போன்ற முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க தெளிவான விளக்க அறிக்கையைத் தயாரித்து அனைத்து மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும் தெரியும் வகையில் விளம்பரம் செய்திடவேண்டும்.
முக்கியமாக குவாரிக்காக போராடிவந்த அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த மாட்டுவண்டி உரிமையாளர்கள் பயன்பெறும் வகையில் குவாரியின் கொள்கை திட்டத்தை வகுத்துச் செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். எனத் தெரிவித்துள்ளார்.