நவம்பர் 20ந்தேதி மதியம், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த பச்சகுப்பம் மேம்பாலம் அருகில் இரண்டு லாரிகள் மணல் ஏற்றிக்கொண்டு சென்றதை ஆம்பூர் வட்டாச்சியர் இந்துமதி பார்த்துள்ளார். இதனையடுத்து அந்த லாரிகளை மடக்கி நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளார்.
விசாரணையில், அந்த லாரிகள் சசிகுமார், பழனி என இருவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. மேலும், இந்த லாரிகள் சின்னவரிக்கம் கிராம பகுதியில் இருந்து மணல் எடுக்க வருவாய்த்துறை தந்தது போல், போலி ஆவணத்தை தயார் செய்து மணல் கடத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது. .
லாரியை சின்னவரிக்கம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர்கள் சேகர், பாஸ்கர் இருவர் ஓட்டி வந்துள்ளதையும் அறிந்தனர். இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்த வட்டாட்சியர் இந்துமதி, ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில், ஓட்டுநர்களை கைது செய்ய இருந்த நிலையில், ஓட்டுநர்கள் இருவரும் தப்பி ஓடியுள்ளனர். இதுப்பற்றியும் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. லாரிகளை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய சின்னவரிக்கம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர்கள் சேகர் மற்றும் பாஸ்கர் ஆகியோரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், மணல் கடத்தும் கும்பல், ஆளும்கட்சியில் உள்ள சில அரசியல் பின்புலம் உள்ள நபர்கள் மூலம் அதிகாரியை சரிக்கட்டும் முயற்சி நடைபெறுவதாக கூறப்படுகிறது. வழக்கு பதிந்தால் ஆயிரக்கணக்கில் அபராதம் கட்ட நேரிடும், வழக்கு முடியும் வரை லாரியை மீட்க முடியாது. இதனால் அபராதம் கட்டாமல், லாரியை கொண்டு செல்ல பேரம் பேச முயல்வதாக கூறப்படுகிறது.
என்ன செய்யப்போகிறார்கள் அதிகாரிகள் என்பது பொருத்திருந்து பார்த்தால் தான் தெரியும் ?.