வள்ளலார் பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வள்ளலார் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆளுநர் ரவி பேசுகையில், 'வள்ளலார் வழியில் அனைவருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கிறார் பிரதமர் மோடி. அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியான ரயில் பாதை என பல்வேறு விஷயங்களை மோடி செய்கிறார். கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகளுக்கு இலவசமாக கொடுத்தது ஜீவகாருண்யம். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பிரதமர் நிதி ஒதுக்கீடு கூட வள்ளலார் வழியில் தான்.
அனைவரும் ஒன்று என்பதைத்தான் சனாதான தர்மம் சொல்கிறது. சனாதன தர்மத்தில் வேறுபாடு இல்லை. பெரியவர், சிறியவர் என்ற கருத்து வேறுபாடு இல்லை. இதில் சிலர் வேறுபாடு காட்டி குளிர்காய் நினைக்கிறார்கள். அதற்கான அவசியம் இல்லை. சிலர் சனாதனத்தை சாதியுடன் தொடர்புபடுத்தி தவறான புரிதலை ஏற்படுத்தி வருகின்றனர். நாட்டில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகத்தில் தான் அதிக அளவில் தற்கொலைகள் நடக்கின்றன' என பேசியுள்ளார்.
ஏற்கனவே பவன் கல்யாண் சனாதானத்தை யாராலும் அழிக்க முடியாது என பேசியதற்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி அதற்கு 'லெட்ஸ் வெயிட் அண்ட் சி' தெரிவித்துள்ள நிலையில் தமிழக அரசியலில் மீண்டும் 'சனாதனம்' குறித்த பேச்சுக்கள் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ஆளுநர் மீண்டும் சனாதனம் குறித்து பேசியுள்ளார்.