கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரில் மிகவும் பழமையானது ஆதிகேச பெருமாள் கோயில். இக்கோயிலில் இருந்த பல லட்சம் மதிப்பிலான ஸ்ரீதேவி ,பூமாதேவி, ஆதிகேசவ சிவபெருமாள், ஆஞ்சநேயர் ,கீரி அம்மன், உட்பட ஆறு சிலைகளை சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு களவாடிச் சென்றனர். இந்த சிலைகள் களவாடப்பட்டது குறித்து அப்போதே உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, அந்தப் புகார் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டு பின்பு இது குறித்து வழக்குப் பதிவு செய்து களவாடப்பட்ட சிலைகளைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வந்த ஷோபா துரைராஜன் என்பவரது வீட்டில் இந்த சிலைகள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அவர்கள் அங்கு சென்று நடத்திய விசாரணையில் மேற்படி சிலைகள் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த சிலைகளை சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் என்பவரின் கலைக்கூடத்தில் இருந்து அவர்கள் விலைக்கு வாங்கி வந்ததாக ஷோபா துரைராஜன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த சிலைகளை போலீசார் கையகப்படுத்தினர். அந்த சிலைகள் உளுந்தூர்பேட்டை ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தில் இருந்து திருடிச் சென்றது என உரிய ஆவணங்களின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த சிலைகளை சிலை கடத்தல் பிரிவு டிஜிபி ஜெயக்குமார் தினகரன், எஸ்பி ரவி, டிஎஸ்பி மோகன், முத்துராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் சிலைகளை ஒப்படைத்தனர். அதன்பிறகு அந்த சிலைகள் அலங்கரிக்கப்பட்டு வாண வேடிக்கை, மேள தாளம் முழங்க, சிலைகளை உளுந்தூர்பேட்டை முக்கிய தெருக்களின் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆலயத்தில் வைத்து அர்ச்சகர்கள் அபிஷேக ஆராதனைகள் நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன் உட்பட திமுக, அதிமுக முக்கிய பிரமுகர்கள் மற்றும் பெருமாள் பக்தர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். கடந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு திருடு போன சிலைகள் மீண்டும் கிடைத்ததால் உளுந்தூர்பேட்டை பகுதி மக்கள் தமிழக அரசுக்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கும் நன்றி தெரிவித்தனர்.