பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52) என்பவர் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) அன்று மாலை கொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஏற்கனவே 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய சூழலில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்து இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவரது மகன் ஹரிதரன் (வயது 37) என்பவரை நேற்று (20.07.2024) கைது செய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட ஹரிதரன் வழக்கறிஞராக பணியாற்றி வருவதும், இவர் அதிமுகவின் கடம்பத்தூர் ஒன்றிய குழு உறுப்பினராக உள்ளதும் தெரியவந்தது.
இவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன் மற்றும் அருளின் நண்பர் ஆவார். அருள் இவ்வழக்கில் குற்றவாளிகள் பயன்படுத்திய 6 செல்போன்களை ஹரிதரனிடம் ஒப்படைத்துள்ளார். இந்த செல்போன்களை மற்றொரு குற்றவாளியான ஹரிஹரன் யாருக்கும் தெரியாமல் தூக்கி எறியுமாறு ஹரிதரனிடம் தெரிவித்ததன் பேரில், ஹரிதரன் 6 செல்போன்களையும் சேதப்படுத்தி திருவள்ளுவர் மாவட்டம், வெங்கத்தூரில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் வீசி எறிந்துள்ளார்.
இதனையடுத்து தனிப்படை போலீசார் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையைச் சேர்ந்த நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்களின் உதவியுடன் கொசஸ்தலை ஆற்றிலிருந்து 3 செல்போன்கள் மீட்கப்பட்டன. மற்ற செல்போன்களையும் கண்டுபிடிக்க மீட்புக் குழுவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அதே சமயம் அதிமுக கவுன்சிலர் ஹரிதரனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
அதே சமயம் ஹரிதரன், வெங்கத்தூர் கூவம் ஆற்றில் வீசியெறிந்த 3 செல்போன்கள் நேற்று (20.07.2024) மீட்கப்பட்ட நிலையில் அந்த செல்போன்கள் தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டன. மேலும் 3 செல்போன்களை தீயணைப்புத்துறையினர் இன்று (21.07.2024) 2வது நாளாக ஆற்றில் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ஏற்கனவே லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்ட ரவுடி சம்போ செந்தில் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு தப்பிச் சென்றாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் தோப்பு பாலாஜி மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் சம்போ செந்திலுக்கு எதிராக கடந்த 2020 ஆம் ஆண்டு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.