
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அடுத்த செல்லிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் டிரைவர் சக்திவேல். இவர் நேற்று நடந்த சாலை விபத்தில் இறந்தார். இந்த விபத்து தொடர்பாக விபத்து ஏற்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்யவில்லை, ஓட்டுனரை கைது செய்யவில்லை. அதனை கண்டித்து செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சுமார் 1000 பேர் புதுச்சேரி நகரம் பத்து கண்ணு சந்திப்பில் காலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மறியல் போராட்டம் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லும் ஊழியர்கள், அலுவலகம் செல்லும் அலுவலர்கள் என அனைவரும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகவும் பாதிக்கப்பட்டனர்.

தகவலறிந்து வில்லியனூர் காவல் நிலைய போலீஸ் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் இறந்த சக்திவேல் உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.