முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள, நலவாரியத்தில் பதிவு பெறாத தொழிலாளர்கள் தமிழக அரசின் கரோனா நிவாரண உதவித்தொகை பெற சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸ் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று அபாயத்தால் தமிழகத்தில் மார்ச் 24 ஆம் தேதி மாலை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவு ஓரளவு தளர்த்தப்பட்டு உள்ளது என்றாலும், மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
நோய்த்தொற்று அபாயம் அதிகளவில் உள்ளதால் முடி திருத்தும் தொழில்களுக்கு மட்டும் இன்னும் முழுமையாக விலக்கு அளிக்கப்படவில்லை. முதல்கட்டமாக, ஊரகப்பகுதிகளில் மட்டும் சலூன் கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
தடை உத்தரவு காரணமாக வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் இழந்து வாடும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் தமிழக அரசு நிவாரண உதவித்தொகை வழங்கி வருகிறது.
அதன்படி, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு கரோனா நிவாரண நிதியாக 28.83 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை பெற்றுள்ள சாலையோர வியாபாரிகளில், இதுவரை 2,148 வியாபாரிகளிடம் வங்கிக் கணக்கு விவரம், அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்கிற்கு 1,000 ரூபாய் வீதம் நேரடியாக 21.48 லட்சம் செலுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், முடி திருத்துவோர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்களுக்கு, அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இரண்டு தவணைகளாக 1,000 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், முடி திருத்துவோர் நலவாரியத்தில் பதிவு பெறாத தொழிலாளர்களுக்கும், இதர அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டதைப் போல நிவாரணத் தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மாநகரப் பகுதியில் உள்ள முடி திருத்தும் தொழிலில் ஈடுபடும் பதிவு பெறாத தொழிலாளர்கள் நிவாரண உதவித்தொகை பெற சம்பந்தப்பட்டவர்களின் முடி திருத்தும் கடைகள் அமைந்துள்ள இடத்திற்கு உட்பட்ட மண்டல அலுவலர்களிடம் உரிய ஆவணங்களுடன் மனுவாகச் சமர்ப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அம்மனுக்களை ஆய்வு செய்து, தகுதியான மனுக்களை மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆகவே, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில் உள்ள முடிதிருத்தும் கடைகளில் பணிபுரியும், இதுவரை நலவாரியத்தில் பதிவு செய்யாத தொழிலாளர்கள், தாங்கள் பணிபுரியும் கடைகள் அமைந்துள்ள மண்டல அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பத்தை வழங்கலாம். அனைத்து வேலை நாள்களிலும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல், ஆதார் அட்டை நகல், முடி திருத்துவோர் நல சங்கத்தின் உறுப்பினருக்கான அடையாள அட்டை நகல், கடைசியாக சந்தா தொகை செலுத்தியதற்கான ரசீது நகல் ஆகிய ஆவணங்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற பின்னர், மாநகராட்சி அலுவலர்கள் தலத்தணிக்கை செய்து, தகுதியான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்வர். அதன்மூலம், இதுவரை பதிவு பெறாத முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணத் தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் சதீஸ் தெரிவித்துள்ளார்.