Skip to main content

கணவனின் செயலால் அதிர்ச்சி... குழந்தையுடன் மாயமான இளம்பெண், போலீசுக்கு பரபரப்பு கடிதம்!

Published on 05/02/2021 | Edited on 05/02/2021

 

salem

 

சேலத்தில், திருமணத்திற்கு முன்பே ஒரு பெண்ணுடன் பழகி, அவள் வயிற்றில் வளர்ந்த கருவைக் கலைத்த கணவனுடன் வாழ விரும்பவில்லை என காவல்துறைக்குக் கடிதம் எழுதி அனுப்பிவிட்டு, கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மணியனூரைச் சேர்ந்தவர் சிவராமன். இவருடைய மனைவி சரண்யா (24). பட்டதாரி. 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்குத் திருமணம் நடந்தது. 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. சிவராமன், கடந்த 3 ஆண்டுகளாக சவுதியில் வேலை செய்து வருகிறார்.

 

இந்நிலையில், பிப். 2ம் தேதி வீட்டில் இருந்த சரண்யா திடீரென்று குழந்தையுடன் மாயமானார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தனர். அவர் சென்ற இடம் தெரியவில்லை.

 

salem:Exciting letter to the cop with the baby!

 

இதுகுறித்து சரண்யாவின் தந்தை அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதில், தனது மகள் பேத்தியுடன் காணாமல் போய்விட்டதாகவும், மகள் காணாமல் போனதன் பின்னணியில் தங்களுக்கு ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியிருந்தார். அந்த புகாரின்பேரில், சந்தேகத்திற்குரிய நபரைப் பிடித்து வந்து காவல்துறையினர் விசாரித்தனர்.

 

அப்போது, அன்னதானப்பட்டி காவல்நிலையத்திற்கு சரண்யா எழுதியிருந்த கடிதம் வந்து சேர்ந்தது. அந்தக் கடிதத்தில், ''என்னுடைய கணவர் சிவராமன், என் சொந்த தாய் மாமன். எனக்கு அவரை திருமணம் செய்துகொள்ள கொஞ்சமும் விருப்பமில்லை. ஆனாலும், பெற்றோர் கட்டாயப்படுத்தி என்னை அவருக்குத் திருமணம் செய்து வைத்தனர்.

 

கடந்த 3 ஆண்டுக்கு முன்பு சவுதிக்கு வேலைக்குச் சென்ற சிவராமன், இதுவரை எங்களைப் பார்க்க வரவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் என்னிடம் வந்து பேசினார். அந்தப் பெண்ணும், சிவராமனும் காதலித்து வந்துள்ளனர். அதன்மூலம் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். அந்தப் பெண்ணின் வயிற்றில் வளர்ந்த கருவை சிவராமன் கலைத்துவிட்டதாக அவர் கூறினார்.

 

இதனால், கருவைக் கலைத்த ஒருவருடன் எனக்கு வாழப் பிடிக்கவில்லை. என்னை யாரும் தேட வேண்டாம்,'' என கடிதத்தில் கூறியிருந்தார். இதுபற்றி காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்