சேலத்தில் உள்ள தனியார் அறக்கட்டளை பெண் நிர்வாகி ஒருவர் மீதான 100 கோடி ரூபாய் மோசடி புகார் குறித்து விசாரணை நடத்தக்கோரி, திடீரென்று தர்ணாவில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த பத்மஸ்ரீ விருதாளர் சின்னப்பிள்ளை அம்மாள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை (பிப். 7) கைது செய்யப்பட்டனர்.
மதுரையைத் தலைமை இடமாகக் கொண்டு தானம் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இதன் கீழ், 14 மாநிலங்களில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. மதுரையில் களஞ்சியம் என்ற பெயரில் மகளிர் சுய உதவிக்குழுக்களை நடத்தி வருகிறது. இந்த இயக்கத்தின் தலைவியாக, பத்மஸ்ரீ விருது பெற்ற, மதுரையைச் சேர்ந்த சின்னப்பிள்ளை அம்மாள் இருந்து வருகிறார்.
இந்நிலையில் சின்னப்பிள்ளை மற்றும் மதுரை தானம் அறக்கட்டளை ஊழியர் லோகமாதா ஆகியோர் தலைமையில் 70க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு புகார் மனு கொடுப்பதற்காக வெள்ளிக்கிழமை (பிப். 7) மதியம் வந்தனர். பின்னர் திடீரென்று அவர்கள், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து கொண்டு தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்கள், சேலத்தில் களஞ்சியம் மகளிர் குழுவில் 100 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்தக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகளிர் குழுவினரின் போராட்டத்தை சற்றும் எதிர்பார்க்காத காவல்துறையினர், தர்ணாவில் ஈடுபட்டதாக சின்னப்பிள்ளை அம்மாள் உள்ளிட்ட 70 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து சின்னப்பிள்ளை அம்மாள் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''சேலத்தைச் சேர்ந்த சிவராணி என்பவர், மதுரை தானம் அறக்கட்டளையின், சேலம் மண்டல ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்தார். கடந்த 2019ம் ஆண்டு பிப். 9ம் தேதியன்று, அவர் தனியாக ஏஸ் பவுண்டேசன் என்ற பெயரில் அறக்கட்டளையைத் தொடங்கினார். சேலத்தில் செயல்பட்டு வந்த களஞ்சியம் குழுக்களையும் அந்த அமைப்புடன் இணைத்துக்கொண்டு, 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளார்.
சேலத்தில் களஞ்சியம் குழுக்கள் நன்றாகத்தான் செயல்பட்டு வந்தது. தற்போது சிவராணி ஒருவரால், கெட்ட பெயர் ஏற்பட்டுவிட்டது. குழு உறுப்பினர்களிடம் பணம் வசூலித்துக்கொண்டும், அவர்களின் வீட்டு பத்திரம், கணக்கு நோட்டுகளை எடுத்துக் கொண்டும் சென்றுவிட்டார். மகளிர் குழு உறுப்பினர்களிடம் வசூலித்த தொகையையும், அவர்களிடம் பெறப்பட்ட ஆவணங்களையும் திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், இது தொடர்பாக முதல்வரை நேரில் சந்தித்து புகார் அளிப்போம்,'' என்றார்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், 'வீட்டுப்பத்திரத்தைத் திருப்பித்தருக', 'எங்கள் கணக்கு நோட்டுகளை திருப்பித்தருக', 'சேலம் களஞ்சியம் குழுக்களின் கணக்கு வழக்குகளை சிறப்பு தணிக்கை அதிகாரிகள் மூலம் தணிக்கை செய்க' என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி தரையில் அமர்ந்து முழக்கமிட்டனர்.
இந்த புகார் குறித்து ஏஸ் பவுண்டேசன் தலைமை நிர்வாகி சிவராணியிடம் கேட்டோம்.
அவர் ''மதுரையில் உள்ள தானம் அறக்கட்டளையின் கீழ், சேலம் மண்டல களஞ்சிய ஒருங்கிணைப்பாளராக வேலை பார்த்து வந்தது உண்மைதான். தானம் அறக்கட்டளை விதிகளின்படி, நிர்வாகப் பொறுப்பில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருக்க முடியாது. ஆனால், அதன் நிர்வாக இயக்குநர் வாசிமலை, 66 வயது கடந்த பின்னும் அந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார். வங்கிகளில் இருந்து ஓய்வு பெற்ற, வயதான பலரையும் அவர் நிர்வாகப் பொறுப்பில் நியமித்துள்ளார்.
தானம் அறக்கட்டளை, பல வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் இருந்து பெறப்பட்ட நிதியில் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில் 3 லட்சம் தனிநபர் கழிப்பறைகள் கட்டித் தருவதாகக் கூறி, அமெரிக்காவைச் சேர்ந்த 'வாட்டர் டாட் ஓஆர்ஜி' நிறுவனத்திடம் இருந்து ரூ.7 கோடி பெற்று, அதில் 80 சதவீத நிதியை கையாடல் செய்துள்ளது. இதுவரை 10 ஆயிரம் கழிவறைகளைக் கூட கட்டவில்லை. ஆனால், பணிகளை முடித்துவிட்டதாக போலி கணக்கு காண்பித்துள்ளது. இதை வாட்டர் டாட் ஓஆர்ஜி நிறுவனமும் நேரடி ஆய்வு மூலம் உறுதிப்படுத்திக் கொண்டது.
இதுபோன்ற விதிமீறல் மற்றும் மோசடிகள் குறித்து கேள்விகள் எழுப்பிய ஊழியர்களை வாசிமலை, எவ்வித முன்னறிவிப்புமின்றி பணிநீக்கம் செய்தார். களஞ்சிய நிறுவனங்கள் சுதந்திரமாக இயங்கக் கூடியவை. சேலம் மண்டலத்தில் இயங்கி வந்த 5400 களஞ்சியம் குழுக்கள், தானம் அறக்கட்டளையில் இருந்து பிரிந்து, ஏஸ் பவுண்டேஷன் என்ற புதிய அறக்கட்டளையை கடந்த 9.2.2019ம் தேதி சேலத்தில் துவங்கின. சின்னப்பிள்ளை அம்மாள்தான், ஏஸ் பவுண்டேஷனை தொடங்கி வைத்தார். அவரே இப்போது சிலரின் தூண்டுதலின்பேரில் எங்கள் மீது பொய்யான புகார்களை சொல்லி வருகிறார்.
களஞ்சியம் மகளிர் குழுக்கள், இந்தியன் வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி ஆகிய வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் நிலுவைத் தொகை தற்போது வரை ரூ.160 கோடி ஆக உள்ளது. இக்குழுக்களின் சேமிப்புத் தொகை ரூ.80 கோடி, இவ்விரு வங்கிகளிலும் அந்தந்த குழுக்களின் பெயரிலேயே வைப்புத் தொகையாக உள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க, குழுக்களின் சேமிப்பை எப்படி ஒருவர் கையாடல் செய்ய முடியும்?,'' என தெரிவித்தார்.
இதையடுத்து சிவராணி தரப்பிலும், சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையிடம் சின்னப்பிள்ளை, லோகமாதா உள்ளிட்டோர் மீது தங்கள் மீது அவதூறு பரப்பியதாக புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.