சேலம் மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் கரோனா ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஒரே நாளில் மொத்தம் 225 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதோடு, 219 பேரிடம் இருந்து இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
கரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தடை உத்தரவை மீறி சாலைகளில் நடமாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாநகர பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஏப். 3) தடை உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்த 73 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களிடம் இருந்து 38 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
அதேபோல், சேலம் மாவட்ட பகுதிகளில் ஆத்தூர், வாழப்பாடி, ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, இடைப்பாடி, தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றித்திரிந்ததாக 152 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மொத்தம் 298 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து 181 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.