சேலம் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் நிர்வாகி ராஜன் என்பவரது வீட்டில் இன்று (25/09/2022) காலை அடையாளம் தெரிய மர்மநபர்கள் மண்ணெண்ணெய் பாட்டிலை வீசினர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள், பின்னர் இந்த சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். பின்னர், ராஜன் வீட்டுக்கு காவல்துறைப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக, ஏழு பேரை காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மண்ணெண்ணெய் பாட்டிலை வீசியதாக இரண்டு பேரை கைது செய்த காவல்துறையினர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் ஐந்து பேர் என மொத்தம் ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் எஸ்டிபிஐ அமைப்பின் சேலம் மாவட்டத் தலைவர் சையது அலி, சேலம் கிளைத் தலைவர் காதர் உசேன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, அம்மாப்பேட்டை காவல் நிலையம் முன்பு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்ட 50- க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களைக் குண்டு கட்டாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெட்ரோல், மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சைத் தொடர்ந்து, பா.ஜ.க. மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.