ராசிபுரத்தைச் சேர்ந்த குழந்தை வியாபார கும்பல், சேலத்தைச் சேர்ந்த தம்பதியிடம் இருந்து ஒரு பெண் குழந்தையை வாங்கி, இலங்கையைச் சேர்ந்த தம்பதிக்கு 8 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக வழக்கறிஞர் ஒருவர் புதிதாக ஒரு பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் அமுதா என்கிற அமுதவல்லி (50). ராசிபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர், சட்ட விரோதமாக குழந்தைகளை விலைக்கு வாங்கி குழந்தையில்லா தம்பதிகளிடம் லட்சகணக்கான ரூபாயை வசூலித்துக்கொண்டு விற்பனை செய்துள்ளது தெரிய வந்தது.
இந்த வழக்கில் அமுதா, அவருடைய கணவர் ரவிச்சந்திரன் மற்றும் இடைத்தரகர்கள் என இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், ராசிபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜ் என்பவர் அமுதா மீது ராசிபுரம் டிஎஸ்பி விஜயராகவனிடம் ஆதாரங்களுடன் புதிதாக ஒரு புகாரை அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:
இலங்கை நாட்டின் கொழும்பு நகரைச் சேர்ந்தவர் குமாராசாமி பிள்ளை தேவராஜா. அவருடைய மனைவி பரிமளாதேவி. இந்த தம்பதியினர் கடந்த 2014ம் ஆண்டு, திருச்சிக்கு வந்து சில நாள்கள் தங்கியிருந்தனர். பின்னர் தாராபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளதாக பதிவு செய்யப்பட்ட ஒரு பிறப்புச்சான்றிதழுடன், குழந்தையுடன் கோவை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு திரும்பினர்.
இலங்கை தம்பதியினர் கொண்டு சென்ற பெண் குழந்தை, உண்மையில் அவர்களுக்கு பிறந்தது இல்லை. அந்தக் குழந்தை, சேலத்தை அடுத்த நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த வடிவேல் - அமுதா தம்பதிக்கு 2014ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி பிறந்தது ஆகும்.
இந்தக் குழந்தை பிறந்த அடுத்த நாளே ராசிபுரம் அமுதா வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஈரோட்டை சேர்ந்த இடைத்தரகர் கோமதி யுவராஜ் என்பவருக்கு கைமாற்றப்பட்டுள்ளது. அதன்பின் இலங்கை தம்பதியான குமாரசாமி பிள்ளை தேவராஜா - பரிமளாதேவி தம்பதியினருக்கு அந்த குழந்தையை 8 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். இதற்கு வடிவேலின் தாய், சகோதரர் ராஜசேகர், அவருடைய மனைவி அனிதா, செங்கோடன் மேஸ்திரி என்பவரின் மனைவி பிரியங்கா ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதையடுத்து இலங்கை தம்பதிக்கு அந்த பெண் குழந்தை பிறந்ததாக, தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் 3.3.2014ல் பிறப்புச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு போலி பிறப்புச்சான்றிதழ் பெற்று, சட்ட விரோதமாக குழந்தையை விற்பனை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குழந்தையை மீட்டு டிஎன்ஏ பரிசோதனைக்கும் உட்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் புகார் மனுவில் கூறியுள்ளார்.
இதுகுறித்து வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜ் மேலும் கூறுகையில், ''ராசிபுரம் அமுதாவும், அவருடைய கூட்டாளிகளும் சேர்ந்து பெண் குழந்தைகளைத்தான் அதிகமாக சட்ட விரோதமாக விற்பனை செய்துள்ளனர். இந்த வழக்கை சிபிஐ அல்லது சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்ற வேண்டும். ஓய்வு பெற்ற பெண் நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும். குழந்தை விற்பனையைத் தடுக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும். தண்டனைகளையும் கடுமையாக்க வேண்டும்,'' என்றார்.