சேலத்தில், பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்து, பாலியல் தொல்லை கொடுத்த கரோனா கைதி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
சேலம் தாதகாப்பட்டி நான்காவது சீரங்கன் தெருவைச் சேர்ந்த ரகுராமன் மகன் லோகநாதன் (35). இவருடைய மனைவி, வீட்டிலேயே அழகு நிலையம் நடத்தி வந்தார். கடந்த மே மாதம், அழகு நிலையத்திற்கு வேலை கேட்டு வந்த இரு இளம்பெண்களிடம் வீச்சரிவாளைக் காட்டி மிரட்டிய லோகநாதன், அவர்களை ஆபாசமாக செல்போனில் படம் எடுத்து வைத்துக்கொண்டார். அந்த படங்களைக் காட்டி மிரட்டியே அவர்களுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்த புகாரின்பேரில், சேலம் நகர அனைத்து மகளிர் காவல்துறையினர், லோகநாதன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர். விசாரணையில், நான்கு பெண்களிடம் லோகநாதன் இதுபோல் ஆபாசப்படம் எடுத்து மிரட்டி வந்திருப்பது தெரிய வந்தது.
பெண்களை அச்சுறுத்தியும், அவர்களின் குடும்பத்தினரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் குற்றத்திலும் ஈடுபட்ட லோகநாதனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, சேலம் மாநகர ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில், காவல்துறையினர் சனிக்கிழமை (ஜூன் 20) அன்று, பாலியல் குற்றவாளி என்ற பிரிவில் லோகநாதனை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். தற்போது சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லோகநாதனிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை காவல்துறையினர் நேரில் சார்வு செய்தனர்.
குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ள லோகநாதனுக்கு, கரோனா நோய்த்தொற்று இருந்தது தெரிய வந்தது. லோகநாதனிடம் இருந்துதான் சேலம் மாநகர காவல்துறை உதவி ஆணையர் ஒருவருக்கும், சிறைக்கு வழிக்காவல் பணியாக அவரை அழைத்துச்சென்ற காவலர் ஒருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.