சேலம் பெரியார் பல்கலையில் விடைத்தாள் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக வந்த புகாரை அடுத்து, லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் பெரியார் பல்கலையில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நேரடியாக சேர்ந்து படித்து வருகின்றனர். மேலும், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு, நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி கலைக்கல்லூரிகள் என 101 கல்லூரிகள் இப்பல்கலையுடன் இணைவு பெற்றுள்ளன. பல்கலையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் நான்கு உறுப்புக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பல்கலை மற்றும் அதனுடன் இணைவு பெற்ற கல்லூரிகளில் நடத்தப்படும் செமஸ்டர் தேர்வுகளின்போது முறைகேடுகளை தடுக்கும் வகையில், மாணவர்களின் புகைப்படம் அச்சிட்ட விடைத்தாள்கள் வழங்கப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2014-2015, 2015-2016, 2016-2017ம் கல்வி ஆண் டுகளின்போது புகைப்படம் அச்சிட்ட விடைத்தாள்களைக் கொள்முதல் செய்ய பெரியார் பல்கலை தரப்பில் டெண்டர் விடப்பட்டது. யார் மிகக்குறைந்த விலைப்புள்ளி கோருகிறாரோ அவருக்கே டெண்டர் வழங்கப்படும். ஆனால், அதிக விலைப்புள்ளி குறிப்பிட்டு இருந்த நிறுவனத்திற்கு விடைத்தாள் அச்சிட்டு வழங்கும் பணிகள் வழங்கப்பட்டது.
பல லட்சம் ரூபாய் கையூட்டு பெற்றுக்கொண்டு அதிக விலைப்புள்ளி கோரிய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும், இந்த ஊழல் குறித்து விசாரிக்க, சென்னையில் லஞ்ச ஒழிப்பு இயக்குநரகத்திற்கும், சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறைக்கும் தொடர்ந்து புகார்கள் வந்தன. புகாரில் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் பெரியார் பல்கலை துணை வேந்தராக சுவாமிநாதன், பதிவாளர்களாக அங்கமுத்து, மணிவண்ணன், தேர்வாணையராக பேராசிரியர் லீலா ஆகியோர் பதவி வகித்துள்ளனர். இவர்கள் காலக்கட்டத்தில்தான் விடைத்தாள் கொள்முதலில் பெரும் ஊ-ழல் நடந்துள்ளதாக புகாரில் சொல்லப்பட்டு இருந்தது.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புப்பிரிவு ஏடிஎஸ்பி சந்திரமவுலி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் தங்கமணி மற்றும் போலீசார் நேற்று (ஆகஸ்ட் 14) மாலை திடீரென்று பெரியார் பல்கலையின் தேர்வாணையர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அங்கே மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்த விடைத்தாள் கட்டுகள் மற்றும் டெண்டர் தொடர்பான ஆவணங்கள் மற்றும் சில கோப்புகளை வழக்கு விசாரணைக்காக போலீசார் அள்ளிச்சென்றனர்.
பல்கலை நிதி அலுவலர் சின்னுசாமி, தேர்வாணையர் அலுவலக கண்காணிப்பாளர் ராஜசேகர் ஆகியோரிடம் விடைத்தாள் கொள்முதலின்போது பின்பற்றப்படும் நடைமுறைகள் தொடர்பாகவும், டெண்டர்தாரருக்கு வழங்கப்பட்ட ரசீதுகள் தொடர்பாகவும் நேரில் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களில் அப்போது பதிவாளராக இருந்த அங்கமுத்து, முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன் பணிக்காலத்தின்போது பணம் பெற்றுக்கொண்டு உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பியதாகவும், அந்த ஊழலில் அவர் தன்னை பலிகடாவாக்கப் பார்ப்பதாகவும் கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு, கடந்த 2017ம் ஆண்டு திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்குப் பிறகு பதிவாளராக பொறுப்பேற்ற மணிவண்ணன், பணிக்காலம் முடிந்து தாய்ப்பல்கலைக்கழகத்திற்கே திரும்பினார். தேர்வாணையாக இருந்த லீலாவும் ஓராண்டுக்கு முன்பு பணிக்காலம் முடிந்து, பல்கலையில் இருந்து விடுபட்டுவிட்டார்.
இந்நிலையில், விடைத்தாள் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக வந்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது, பெரியார் பல்கலை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.