சேலத்தில் கட்டுக் கட்டாக 62 லட்ச ரூபாய் பணத்துடன் பிடிபட்ட முதியவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த 25ம் தேதி பகலில், பள்ளப்பட்டி காவல் நிலைய காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, முதியவர் ஒருவர் கையில் ஒரு கனமான பையை தூக்க முடியாமல் தூக்கி வந்து கொண்டிருந்தார். சந்தேகத்தின் பேரில் அந்த முதியவரை அழைத்து காவல்துறையினர் விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் கொண்டு வந்த பையை வாங்கி பார்த்தபோது, அதற்குள் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. அவற்றை காவல்துறையினர் எண்ணிப் பார்த்தபோது 62 லட்ச ரூபாய் இருந்தது. அனைத்தும் 500 ரூபாய் தாள்களாக இருந்தன.
விசாரணையில், அந்த முதியவர் பெயர் பாலகிருஷ்ணன் (வயது 59) என்பதும், ஈரோடு மாவட்டம் குமலன்குட்டை என்ற பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. காவல்துறை உதவி ஆணையர் சரவணகுமார், ஆய்வாளர் ராணி ஆகியோர் விசாரித்தபோது, நகைக்கடைகளில் கொடுக்கும் நகைகளுக்கு ஆர்டரின் பேரில் நகைகளை மொத்தமாக விற்பனை செய்து வருவதாகவும், நகை கடைக்காரர்களிடம் நகைக்குரிய பணத்தை வசூலித்து கொடுத்தால் கமிஷன் கிடைக்கும். அவ்வாறு நகைகளை விற்றதன் மூலமும், கமிஷன் பணத்தையும்தான் எடுத்து வந்ததாகச் சொன்னார்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், சேலத்தில் புதிதாக ஒரு நிலத்தை பத்திரப் பதிவு செய்வதற்காக பணத்தைக் கொண்டு வந்ததாகவும் கூறினார். எனினும், அவர் கொண்டு வந்த பணத்திற்கு உண்டான ரசீதுகளோ, நகை ஆர்டர் கொடுத்த கடை விவரங்களோ ஏதும் இல்லை. ஒருவேளை, ஈரோடு கிழக்கு தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக கொண்டு செல்லப்படும் பணமாக இருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். முதியவரின் முரணான தகவல்களால் குழம்பிப்போன காவல்துறையினர், இது தொடர்பாக சேலம் மண்டல வருமான வரித்துறைக்கு தகவல் அளித்தனர். வருமான வரித்துறை உதவி ஆணையர் ராஜாராம், ஆய்வாளர் தங்கபாலன் ஆகியோரிடம் முதியவர் பாலகிருஷ்ணனையும், அவர் கொண்டு வந்த பணத்தையும் ஒப்படைத்தனர். அவர்கள் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.