வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் சிக்கி, ஆறு மாதத்திற்கு மேலாக காத்திருப்போர் பட்டியலில் இருந்த சேலம் மாநகராட்சி முன்னாள் பொறியாளர் அசோகன், நெல்லை மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்தவர் அசோகன் (59). இவர், சேலம் மாநகராட்சியில், மாநகர பொறியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2013 முதல் 2018ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறைக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் புகாரில் உள்ள முகாந்திரம் குறித்து முதல்கட்ட விசாரணை நடத்தினர். 2013ம் ஆண்டு வாக்கில் அசோகன், அவருடைய மனைவி பரிவாதினி, தாயார் பாக்கியம் ஆகியோரின் சொத்து மதிப்பு 14.57 லட்சம் ரூபாயாக இருந்தது தெரியவந்தது.
2018ம் ஆண்டில் அசோகன் மற்றும் குடும்பத்தாருடைய சொத்து மதிப்பு 3.30 கோடி ரூபாயாக கிடுகிடுவென உயர்ந்து இருந்தது. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், விளைநிலம், காலி மனைகள் என சொத்துகளை சேர்த்துள்ளது தெரியவந்தது. விசாரணைக்கு உட்பட்ட காலக்கட்டத்தில் அசோகன் உள்ளிட்டோரின் மாதச்சம்பளம், மனை விற்பனை உள்ளிட்ட இதர இனங்கள் மூலமான வருவாய் என 1.22 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. இதே காலகட்டத்தில் 27.80 லட்சம் ரூபாய் செலவுகளும் ஆகியுள்ளன.
வருவாய் மற்றும் செலவினங்கள் போக அசோகன், அவருடைய மனைவி, தாயார் ஆகியோர் 2.20 கோடி ரூபாய் வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அசோகன் உள்ளிட்ட மூவர் மீதும் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சேலம் மாநகராட்சி மாநகர பொறியாளர் பணியில் இருந்து அவரை விடுவித்து, தமிழக நகராட்சிகள் நிர்வாக ஆணையர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டார். திருப்பூரில் மாநகர பொறியாளராக பணியாற்றி வந்த ரவி, சேலம் மாநகராட்சிக்கு மாற்றப்பட்டு, அவர் கடந்த 1.11.2021ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இது ஒருபுறம் இருக்க, சேலம் நகர கூட்டுறவு வங்கியில் அசோகன், அவருடைய மனைவி ஆகியோரின் லாக்கர்களை திறந்து, லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் திடீர் ஆய்வு செய்தனர். 45 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 130 பவுன் நகைகள் இருப்பது தெரியவந்தது. ஆதற்கான சோர்ஸ்கள் கேட்டும் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
சேலம் மாநகர பொறியாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஆறு மாதத்திற்கு மேலாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவரை, நெல்லை மாநகராட்சி பொறியாளராக நியமித்து நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் ஷிவ்தாஸ் மீனா, இரு நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டுள்ளார். அசோகன் குடும்பத்தினருக்கு சேலத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள், ஏற்காடு நாவலூரில் 30 ஏக்கர் நிலம் உள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்த சொத்துகளை அவர் பினாமிகள் பெயர்களில் பதிவு செய்துள்ளதாகவும் சொல்கின்றனர். இதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
பொறியாளர் அசோகன், வரும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.