சேலத்தில் நகை சீட்டு, டெபாசிட் திட்டங்கள் மூலம் 50 கோடி முதல் 100 கோடி ரூபாய் வரை சுருட்டிக் கொண்டு நகைக்கடை அதிபரும் அவருடைய மனைவியும் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் பொன்னம்மாபேட்டை அருகில் உள்ள அல்லிக்குட்டையைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 40). இவருடைய மனைவி லலிதா (வயது 38). இவர்கள், சேலம் ராஜகணபதி கோயில் அருகில் லலிதாம்பிகை ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்தனர்.
இந்த கடையில் தங்கம், வெள்ளி, வைர நகைகள் மட்டுமின்றி கவரிங் நகைகளும் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்கள் சில கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, அதன்மூலம் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரொக்கமாகவும், நகைகளாகவும் டெபாசிட் பெற்றுக்கொண்டு திடீரென்று கடையைப் பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.
இதையடுத்து முதலீட்டாளர்கள், அல்லிக்குட்டையில் உள்ள தங்கராஜின் வீடு மற்றும் பொன்னம்மாபேட்டை சக்தி நகரில் உள்ள அவருடைய மாமனார் தேவராஜ் ஆகியோரின் வீடுகளை முற்றுகையிட்டனர். வியாழக்கிழமை (ஜன. 27) தேவராஜின் வீட்டை நூறுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த அம்மாபேட்டை காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று, பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்கும்படி கூறி, அவர்களை அனுப்பி வைத்தனர்.
லலிதாம்பிகை நகைக்கடையில் நடந்த நூதன மோசடி குறித்து, அந்தக் கடையின் ஊழியர்கள், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் விசாரித்தோம். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
தங்கராஜூம், அவருடைய மனைவியும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சேலம் நகரில் நகைக்கடை நடத்தி வந்துள்ளனர். இந்தக் கடையில் மூன்று வகைகளில் நூதனமாக மக்களிடம் நகை, பணத்தை சுருட்டி உள்ளனர்.
நகை சீட்டு திட்டத்தில் முதலீட்டை பெறுவது, தங்க நகைகளை அடமானமாக பெற்று அதன் எடைக்கு எடை செய்கூலி, சேதாரமின்றி புதிய தங்க நகைகளை வழங்கும் திட்டம், நேரடியாக ரொக்கமாக டெபாசிட் செய்து அதற்கு மாதந்தோறும் கணிசமான வட்டியும், ஓராண்டு முடிவில் அசலையும் திரும்பப் பெற்றுக் கொள்ளும் திட்டம் என மூன்று திட்டங்களை நடத்தி வந்திருக்கிறார் தங்கராஜ்.
சேலத்தை தலைமை இடமாகக் கொண்டு, சின்ன சேலம், ஏற்காடு, பேளூர், ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் கலெக்ஷன் செண்டர்களையும் திறந்துள்ளார். நகைச்சீட்டு, டெபாசிட் திட்டங்களில் வாடிக்கையாளர்களை பிடிக்க 45- க்கும் மேற்பட்ட ஊழியர்களை தங்கராஜ் பணிக்கு அமர்த்தி உள்ளார்.
இதுதவிர, இன்னொரு வகையிலும் மோசடி செய்திருக்கிறார் என்கிறார்கள். லலிதாம்பிகை கடைக்குத் தேவையான நகை ஐட்டங்களை சேலத்தைச் சேர்ந்த சில நகைப்பட்டறை அதிபர்கள், நகைக்கடை அதிபர்களிடம் கொள்முதல் செய்து வந்துள்ளார் தங்கராஜ். அந்த நகைகளுக்கு உண்டான நிகர எடையில் தங்கமாகவோ, அதன் மதிப்பிலான பணமோ ஒரு வாரத்திற்குள் செட்டில்மெண்ட் செய்யப்பட வேண்டும் என்கிறார்கள் டீலர்கள்.
அதிகபட்சம் 150 கிராம் வரையிலான நகைகளுக்கு மட்டும் கடன் நிலுவை வைத்துக் கொள்ள அனுமதித்துள்ளனர். அந்த நிலுவையையும் ஒரு வாரத்திற்குள் செட்டில்மெண்ட் செய்திட வேண்டும். ஆனால் டீலர்களுக்கும் கடந்த இரண்டு மாதமாக உரிய தங்கம் மற்றும் பணத்தை செட்டில்மெண்ட் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இதனால் பொறுமை இழந்த டீலர்கள் சிலர், லலிதாம்பிகை நகைக் கடைக்குள் புகுந்து, அங்கிருந்த தங்க நகை தரப்பரிசோதனை செய்யப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் உள்ளிட்ட முக்கிய தளவாடச் சாமான்களை தூக்கிச் சென்றுள்ளனர்.
சேலத்தைச் சேர்ந்த கிருத்திகா, அவருடைய கணவர் உதயகுமார் ஆகியோர் கூறுகையில், ''தங்கராஜ் எங்களுக்கு நெருக்கமான உறவினர். அவர் புதிதாக நகைக்கடை திறந்திருக்கிறேன். சில கணக்கு வழக்குகளுக்காக முதலீடு தேவைப்படுகிறது. நீங்கள் நகைகளை டெபாசிட் செய்தால் பவுனுக்கு 600 ரூபாய் வீதம் மாதந்தோறும் போனசாக கொடுத்து விடுகிறேன் என்றார். ஓராண்டு கழித்து அந்த நகைகளை திருப்பி எடுத்துக் கொள்ளலாம் அல்லது அதே எடைக்கு புதிய நகைகள் வாங்கிக் கொள்ளலாம் என்றார்.
அதை நம்பி நானும் என் குடும்பத்தினரும் 40 பவுன் நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும் அவரிடம் டெபாசிட் செய்தோம். போனசாக கொடுத்த தொகைக்கும் கூடுதல் போனஸ் தருவதாகச் சொல்லி அதையும் மறு டெபாசிட் செய்து கொண்டார். கடைசியில் எங்கள் நகைகளைக்கூட தராமல் ஏமாற்றி விட்டார்,'' என்றனர்.
இதே கடையில் நவீன், துரைராஜ், கிரி ஆகியோர் தங்கராஜுக்கு வலதுகரம் போல செயல்பட்டு வந்துள்ளனர். அவர்களும் நிறைய பேரிடம் முதலீடுகளை திரட்டிக் கொடுத்துள்ளதால், தங்கராஜ் செய்த மோசடியால் தற்போது இவர்களும் தலைமறைவாகிவிட்டனர்.
இவர்களில் நவீன் என்பவரும் இதே நகைக்கடையில் 25 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்துள்ளதாக அவருடைய தந்தை கண்ணன், தாயார் உமா ஆகியோர் கூறினர். ''என் மகன் கல்யாணத்திற்காக சிறுகச்சிறுக சேர்த்து வைத்திருந்த 25 லட்சத்தையும் பறிகொடுத்துட்டு நிக்கிறோம். அதுமட்டும் இல்லீங்க... என் மகனை கஸ்டமர்கள் மிரட்டுறாங்க. அவன் வீட்டுக்கு வந்தே மூணு நாளாச்சுங்க... என்ன ஆனானு தெரியல...,'' என கண்ணீர் மல்க கூறினார்.
கன்னங்குறிச்சியைச் சேர்ந்த தனபால், ''லலிதாம்பிகை ஜூவல்லரியில் நான் 12 லட்சம் ரூபாயும், எனது மைத்துனர் சுதர்சன் 13 லட்சம் ரூபாயும் முதலீடு செய்திருந்தோம். முதலீடு செய்த காலக்கட்டத்தில் லட்ச ரூபாய்க்கு 27 கிராம் தங்கமும், 2 லட்சம் ரூபாய்க்கு 45 கிராம் தங்கமும் தருவதாகச் சொன்னார். ஆனால் சொன்னபடி தங்கமும் தரவில்லை. பணமும் திருப்பித்தரவில்லை,'' என்றார்.
ரொக்கமாக டெபாசிட் செய்யும் முதலீட்டாளர்களுக்கு மாதம் 4 முதல் 7 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும் என்றும், ஓராண்டு முடிவில் டெபாசிட்டை திரும்பப் பெறலாம் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பை நம்பி ஏராளமானோர் பணத்தை கொட்டியிருக்கிறார்கள். டெபாசிட் பெற்றதற்கான முத்திரைத்தாள் ஒப்பந்த பத்திரம் கூட தராமல், கடையின் பெயரை அச்சிட்ட சாதாரண பேப்பரில் ரசீது கொடுத்துள்ளார் தங்கராஜ்.
மோசடி மன்னன் தங்கராஜ், சில ஆண்டுக்கு முன்பு சேலத்தில் முத்ரா ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையில் வேலை செய்து வந்தார். அந்த நகைக்கடையும் சீட்டு திட்டங்களை நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்தது. அதே ஃபார்முலாவை பின்பற்றியே தங்கராஜூம் தற்போது ஆசை வலை விரித்து மோசடியில் ஈடுபட்டிருக்கிறார் என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.
தங்க நகைகளை டெபாசிட்டாக பெறும் தங்கராஜ், அவற்றை உடனடியாக உருக்கி கச்சா தங்கமாக மாற்றி விடுவாராம். அந்த தங்கக்கட்டிகளை முத்தூட், மணப்புரம், ஐஎல்எப் உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்து, குறைந்த வட்டிக்கு கடன் பெற்று அதை வெவ்வேறு தொழில்களில் முதலீடு செய்திருக்கிறார்.
இந்த கடையின் ஊழியர்கள் கூறுகையில், ''எங்களுக்கே கடந்த டிசம்பர் மாதம் சம்பளம் இன்னும் தராமல் ஏமாற்றிவிட்டு ஓடிப்போய்விட்டார். இங்கு சாதாரண சம்பளத்தில் வேலை செய்து வரும் ஊழியர்கள் கூட இதே கடையில் அதிக போனஸ் தொகைக்கு ஆசைப்பட்டு நகைகளையும், பணத்தையும் முதலீடு செய்துள்ளனர். தற்போது எங்களுக்கும் தங்கராஜ் பட்டை நாமம் போட்டுவிட்டார்.
நாளுக்கு நாள் டீலர்கள், வாடிக்கையாளர்களிடம் இருந்து நெருக்கடி வந்ததால் சில நாள்களுக்கு முன்பு திடீரென்று கடையைப் பூட்டிவிட்டு தங்கராஜூம், அவருடைய மனைவியும் தலைமறைவாகி விட்டனர்.
நகை சீட்டுத் திட்டத்தில் மட்டும் 3100 வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இதுபோல தங்கம் டெபாசிட், ரொக்கம் டெபாசிட் திட்டங்களையும் கணக்கிட்டால் 40 கிலோவுக்கு மேல் தங்கம், பல கோடி ரூபாய் ரொக்கம் என 50 கோடி முதல் 100 கோடி ரூபாய் வரை சுருட்டியிருக்கலாம். நெருக்கடி முற்றியதால் ஊழியர்களுக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் மூன்று நாள்களுக்கு கடை விடுமுறை என்று கடையின் ஷட்டர் முன்பு நோட்டீஸ் ஒட்டி வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர்,'' என்றனர்.
சேலம் லலிதாம்பிகை நகைக்கடை மோசடி குறித்து சேலம் நகர குற்றப்பிரிவு காவல்துறையில் ஏராளமானோர் புகார்களை கொடுத்து வருகின்றனர். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.