சேலத்தில் முஸ்லிம் மகளிர் சங்க நிர்வாகி கொல்லப்பட்ட வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவர் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் அம்மாபேட்டை பாலாஜி நகர் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் பாஷா. இவருடைய மனைவி உமைபானு (45). இவர், சேலம் முதல் அக்ரஹாரத்தில் உள்ள ஈஸ்வரன் கோயிலுக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் துணிக்கடை நடத்தி வந்தார். அரசு சார்பில் இயங்கி வரும் சேலம் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் மையத்தின் செயலாளராகவும், அல்-அமானத் அறக்கட்டளை என சொந்தமாக ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து, அதன் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி, வீட்டிற்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் உமைபானு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து அவருடைய கணவர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அரசு வேலை வாங்கித் தருவதாகவும், வங்கிகளில் கடன் பெற்றுத் தருவதாகவும், நிலம் வாங்கிக் கொடுப்பதாகவும் கூறி பலரிடம் பணம் வசூலித்துக்கொண்டு ஏமாற்றி வந்திருப்பது தெரிய வந்தது. இதனால் பணம் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட மோதலில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகித்தனர்.
இதையடுத்து, கொலையாளிகளைப் பிடிக்க அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் கணேசன், கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் அன்பழகன், அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் பொன்ராஜ், அம்மாபேட்டை மகளிர் காவல் ஆய்வாளர் சிவகாமி, எஸ்ஐக்கள் சதீஸ்குமார், கார்த்திகேயன், கார்த்தி, ஆனந்தகுமார், ரங்கராஜன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
சம்பவத்தன்று அவருடைய வீட்டுக்கு வந்து சென்ற மர்ம நபர்கள் குறித்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்டறிந்தனர். மேலும், அவருடைய செல்ஃபோனில் இருந்து யார் யாருக்கு அடிக்கடி பேசப்பட்டுள்ளது? அவரை அடிக்கடி தொடர்புகொண்ட நபர்கள் யார் யார்? என்பது உள்ளிட்ட விவரங்களையும் தனிப்படையினர் சேகரித்தனர்.
கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த அக்தர் மகன் அக்பர் பாஷா (43) என்பவர், உமைபானுவிடம் வியாபாரம் தொடர்பாக 40 லட்சம் ரூபாய் கொடுத்திருந்ததும், அந்தப் பணத்தை அவர் திருப்பிக் கேட்டபோது உமைபானு திருப்பிக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதனால் அவரிடம் எப்படியாவது பணத்தை வாங்கியாக வேண்டும் என்ற நோக்கத்தில் மார்ச் 12ஆம் தேதியன்று அக்பர் பாஷா, உமைபானு வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அவருக்குத் தெரிந்த சேலம் பொன்னம்மாபேட்டை, திப்பு நகர் ரயில்வே லைன் தெற்கு தெருவைச் சேர்ந்த பாஷா மகன் அப்சர் என்ற சொச்சோ (29), பொன்னம்மாபேட்டை மஜித் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் ரகுபதி (29) ஆகியோரையும் அழைத்துச் சென்றுள்ளார்.
உமைபானுவிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, அவர் பணம் தர முடியாது என்று மறுத்திருக்கிறார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த அக்பர் பாஷா உள்ளிட்ட மூவரும் உமைபானுவை கை, கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணியை வைத்து அடைத்து மூச்சுத்திணறல் ஏற்படுத்தி கொலை செய்துள்ளனர். அதன்பிறகும், சுவரில் அவரது தலையை மோதச் செய்திருப்பதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், அவர்கள் மூன்று பேரும் பொன்னம்மாபேட்டையில் ஓரிடத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர், மூவரையும் புதன்கிழமை (மார்ச் 17) கைது செய்தனர். கைதான மூவரையும் சேலம் மாவட்ட 5வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் அன்பு முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவருடைய உத்தரவின்பேரில் மூவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.