
சேலத்தில் மளிகைக் கடையில் போதைப் பொருட்களை விற்பனை செய்ததாக வடமாநிலத்தைச் சேர்ந்த நான்கு வாலிபர்களைக் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள சில மளிகைக் கடைகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அந்தக் கும்பலைக் கூண்டோடு பிடிக்க சேலம் மாநகரக் காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா, செவ்வாய்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் காவல்துறையினர் கடந்த ஜூன் 23ஆம் தேதி அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சந்தேகத்தின்பேரில், மளிகைக் கடை நடத்திவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பரத் சிங் (25) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் ஒரு கிடங்கை வாடகைக்கு எடுத்து, அங்கு ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களைப் பதுக்கிவைத்து, மாநகர பகுதிகளில் சப்ளை செய்தது தெரியவந்தது.
பரத் சிங் கூறிய தகவலின்பேரில் மகுடஞ்சாவடியில் உள்ள கிடங்கில் காவல்துறையினர் ஆய்வுசெய்தனர். அங்கு தடை செய்யப்பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பாக்கு பொட்டலங்கள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மேலும் மூட்டைகளுக்கு இடையில் 33 லட்சம் ரூபாய் ரொக்கம் பதுக்கிவைத்திருந்தனர். போதைப் பொருட்கள் மற்றும் ரொக்கத்தைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பதுக்கி விற்றதாக மளிகைக் கடைக்காரர் பரத் சிங் (25), அவருடைய தம்பி தீப் சிங் (25), நண்பர்கள் ஓம் சிங், மதன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர்கள் நான்கு பேரும் தொடர்ந்து இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால் அவர்களைக் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய மாநகரக் காவல் ஆணையருக்கு காவல் ஆய்வாளர் ராஜசேகர் பரிந்துரை செய்தார். அதன்பேரில், அவர்கள் நால்வரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆணையர் உத்தரவிட்டார். அதையடுத்து, நான்கு பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
இதற்கான கைது ஆணையை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பரத் சிங் உள்ளிட்ட நான்கு பேரிடமும் காவல்துறையினர் நேரில் வழங்கினர்.