சேலத்தில், ஜாமீன் பெற்ற மனைவியை விட்டுவிட்டு, அவருடைய கணவரை விடுதலை செய்ததாக மத்திய சிறை ஜெய்லர் உள்ளிட்ட மூன்று பேரிடம் துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.
சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் சதாசிவம் (40). ஜேசிபி மற்றும் டிராக்டர்களை சொந்தமாக வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரின் மனைவி பவித்ராவுடன் தவறான தொடர்பு இருந்து வந்தது.
இதையறிந்த ரஞ்சித்குமார், கடந்த ஜூன் 22ம் தேதி இரவு, மனைவி மூலம் சதாசிவத்தை தன் வீட்டுக்கு வரவழைத்தார். கணவனும், மனைவியும் உறவினர் விஜயகுமார் என்பவருடன் சேர்ந்து சதாசிவத்தை அடித்து கொலை செய்தனர். இதுகுறித்து விசாரித்து வந்த ஏத்தாப்பூர் காவல்துறையினர், மேற்சொன்ன மூவரையும் கைது செய்தனர்.
இவர்களில் ரஞ்சித்குமார், விஜயகுமார் ஆகியோர் சேலம் மத்திய சிறையிலும், பவித்ராவை சேலம் பெண்கள் கிளைச் சிறையிலும் நீதிமன்ற காவலில் அடைத்தனர். கணவன், மனைவி இருவரும் ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர், ஆனால் இருவரின் மனுக்களும் தள்ளுபடி ஆனது.
இதைத் தொடர்ந்து பவித்ரா, ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பவித்ராவை கடந்த புதன்மைகிழமையே (ஜூலை 22) ஜாமீனில் விடுவிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதற்கான உத்தரவு நகல், சேலம் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து சேலம் பெண்கள் கிளைச்சிறைக்கு நகலை அனுப்ப வேண்டும். ஆனால் ரஞ்சித்குமாருக்கு ஜாமீன் கிடைத்துள்ளதாக கருதிய சிறை அலுவலர்கள், அவரை கடந்த வியாழக்கிழமை (ஜூலை 23) விடுவித்தனர். அவரும் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
ஜாமீன் பெற்ற பவித்ராவோ, சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவருடைய தரப்பு வழக்கறிஞர், பவித்ரா விடுதலை செய்யப்படாதது குறித்து கேள்வி எழுப்பிய பிறகே, மனைவிக்கு பதிலாக கணவர் ரஞ்சித்குமாரை சிறைத்துறையினர் விடுதலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, காதோடு காதாக ரஞ்சித்குமாரை உடனடியாக கைது செய்து, மீண்டும் சிறையில் அடைத்தனர். அதன்பிறகே ஜாமீன் பெற்ற பவித்ரா விடுவிடுக்கப்பட்டார்.
மனைவிக்கு பதிலாக கணவர் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவை சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம், இதுகுறித்து விசாரிக்குமாறு சேலம் மத்திய சிறை எஸ்.பி. தமிழ்ச்செல்வனுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், ஜெய்லர் மதிவாணன் மற்றும் 2 சிறை அலுவலர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது.
முதல்கட்ட விசாரணையில், கணவன், மனைவி இருவருமே ஒரே குற்ற எண்ணில் கைது செய்யப்பட்டவர்கள். சிறைத்துறை பதிவேட்டில் பவித்ரா பெயரின் கீழ் கணவர் ரஞ்சித்குமார் எனக் கூறப்பட்டு இருந்தது. அதனால் ஏற்பட்ட கவனக்குறைவால் ரஞ்சித்குமாருக்குதான் ஜாமீன் கிடைத்திருப்பதாக கருதி, அவரை விடுதலை செய்திருப்பது தெரிய வந்தது. பணியின்போது அலட்சியமாக இருந்ததாக சிறைத்துறை வட்டாரத்தில் சிலர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறுகின்றனர்.