சேலம் சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர், கடந்த மே 20- ஆம் தேதி, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே நடந்து சென்றபோது, மர்ம நபர் ஒருவர் அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் மற்றும் ரொக்கம் 1,250 ரூபாயைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.
இதுகுறித்து வெங்கடேஷ் அளித்த புகாரின்பேரில், கிச்சிப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது, கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன் என்கிற தம்பா மணிகண்டன் (27) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, சேலம் மத்தியச் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.
பிரபல ரவுடியான தம்பா மணிகண்டன் ஏற்கனவே பலமுறை வழிப்பறி, அடிதடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு உள்ளார். சிறையில் இருந்து பிணையில் விடுதலை ஆகும். அவர் மீண்டும் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து, சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
அதன்பேரில், காவல்துறையினர் ரவுடி தம்பா மணிகண்டனை குண்டர் சட்டத்தில் வெள்ளியன்று (ஜூன் 12) கைது செய்தனர். கைது ஆணையை, சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தம்பா மணிகண்டனிடம் காவல்துறையினர் நேரில் சார்வு செய்தனர். இதேபோன்ற குற்றங்களுக்காக கடந்த 2016- ஆம் ஆண்டே ஒருமுறை அவர் குண்டாஸில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இரண்டாம் முறையாக அதே சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.