சேலத்தில், குரங்குகளை துன்புறுத்தியதாக வனச்சரகர் அதிரடியாக இடமாறுதல் செய்யப்பட்டார். மேலும், அவர் மீது புகார் அளித்த சமூக ஆர்வலர் மீதே பதிலுக்கு வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ள சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காடு மலை அடிவார பகுதியில் இருந்தே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான குரங்குகள், காட்டுப்பன்றிகள், முயல்கள், காட்டு மாடுகள் வசிக்கின்றன.
அடிவாரம் அருகே உள்ள தேநீர் கடைகள், பேக்கரிகள், கல்யாண மண்டபம் ஆகியவற்றுக்குள் குரங்குகள் கூட்டமாக நுழைந்து அட்டகாசம் செய்வதாக புகார்கள் கிளம்பின.
இதையடுத்து, சேர்வராயன் தெற்கு வனச்சரகர் சரவணன் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு, குரங்குகளை பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். பிடிபட்ட குரங்குகளை கூண்டில் அடைத்து வாகனத்தில் ஏற்றும்போது இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.
இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்த மோகன்குமார் (44) மற்றும் பொதுமக்கள், குரங்குகளை துன்புறுத்திய வனத்துறை ஊழியர்களைக் கண்டித்து திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் கன்னங்குறிச்சி காவல்துறை வரை போகவே, அவர்கள் வந்து மக்களை சமதானப்படுத்தினர்.
வனத்துறை ஊழியர்கள் குரங்குகளை துன்புறுத்தியதாக மோகன்குமார், சேலம் மண்டல வனப்பாதுகாவலர் பெரியசாமியிடம் நேரில் புகார் அளித்தனர்.
விசாரணையில், குரங்குகளை பிடிக்கும்போது உரிய விதிகளை பின்பற்றாமல் இருந்ததும், கம்பியால் அடித்து துன்புறுத்தியதும் உறுதியானது. இதையடுத்து, சேர்வராயன் தெற்கு வனச்சரகர் சரவணனை நாமக்கல் சோதனைச்சாவடிக்கு இடமாற்றம் செய்து மண்டல வனப்பாதுகாவலர் உத்தரவிட்டார். சேர்வராயன் தெற்கு வனச்சரகத்திற்கு பொறுப்பு அதிகாரியாக அஸ்தம்பட்டி சந்தன மரக்கிடங்கு வனச்சரகர் உமாபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, மலை அடிவாரத்திற்கு வரும் குரங்குகளுக்கு வனச்சட்ட விதிகளை மீறி உணவு வழங்கியதாக மோகன்குமார் மீது சேர்வராயன் தெற்கு வனச்சரகர் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பேரில் காவல்துறையினர் அவரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
தவறு செய்த ஊழியர்கள் மீது புகார் கூறினால், குற்றத்தை சுட்டிக்காட்டியவர் மீதே வழக்குப்பதிவு செய்து கைது செய்யும் புதிய உத்தியை சேலம் மாவட்ட வனத்துறை கையில் எடுத்துள்ளது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.