சேலத்தை அடுத்த மல்லூர் அருகே உள்ள சந்தியூரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் மற்றும் மதுபானக் கிடங்கு உள்ளது. டாஸ்மாக் மாவட்ட மேலாளராக அம்பாயிரம் பணியாற்றி வருகிறார். இங்கிருந்துதான் சேலம் மாநகரம், மாவட்டப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்கள் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் மதுபான ஆலை பிரதிநிதிகள், டாஸ்மாக் கடை பணியாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் பணமாகவும், பட்டாசு, இனிப்புகளாகவும் அன்பளிப்புகள் பெறப்படுவதாக புகார்கள் சென்றன.
இதையடுத்து, சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு கூடுதல் எஸ்பி சந்திரமவுலி தலைமையில் காவல்துறையினர் நவ. 13- ஆம் தேதி மாலை 04.00 மணியளவில், டாஸ்மாக் கிடங்கு மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின்போது கவர்களில் பணம் மற்றும் ஏராளமான பட்டாசு கிப்ட் பாக்சுகள் இருப்பது தெரிய வந்தது.
அவற்றை கொடுத்தது நபர்கள் யார் யார்? அல்லது கொள்முதல் செய்திருந்தால் அதற்கான ஆதாரங்கள் கேட்டபோது ஊழியர்களிடம் இருந்து முறையாக பதில் அளிக்கவில்லை. இந்த சோதனையில் அலுவலகம் மற்றும் கிடங்கில் இருந்து கணக்கில் வராத 1.21 லட்சம் ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் டாஸ்மாக் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.