சேலம் அம்மாபேட்டை காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகன் சூர்யபிரகாஷ் (16). எஸ்எஸ்எல்சி படித்து விட்டு, பொதுத்தேர்வுக்காக காத்திருந்தார். கரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், வீட்டில் இருந்து வந்த சூர்யபிரகாஷ், செல்போனில் வாட்ஸ்அப், பேஸ்புக், விளையாட்டு எனப் பொழுதைக் கழித்துள்ளார்.
காலையில் தூங்கி எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை செல்போனும் கையுமாகவே இருந்ததால் மகனை அவருடைய தந்தை கண்டித்துள்ளார். செல்போனையும் அவரிடம் இருந்து பெற்றோர் பிடுங்கி வைத்துள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த சூர்யபிரகாஷ் விஷம் குடித்தார். மயங்கிக் கிடந்த அவரை பெற்றோர் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் சூர்யபிரகாஷ் உயிரிழந்தார்.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் வீட்டில் இருக்கும் சிறுவர்களிடம் செல்போனில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று மனநல மருத்துவர்கள் ஏற்கனவே அறிவுரைகள் வழங்கியுள்ள நிலையில், தற்போது மாணவனின் உயிரை செல்போன் பறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வீட்டில் இருக்கும் சிறுவர்களுக்கு புத்தகங்கள் படிப்பது, பாரம்பரிய விளையாட்டுகளைக் கற்றுக்கொடுப்பது உள்ளிட்ட நல்லொழுக்கங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்கிறார்கள் மனநல ஆலோசகர்கள்.