சேலம் அருகே, சூரியூர் வனக்கிராமத்தில் வசித்து வந்த 77 மலைவாழ் குடும்பத்தினரை வனத்துறையினர் சட்டத்திற்கு புறம்பாக அப்புறப்படுத்திய விவகாரம் தொடர்பாக சேலம் மாவட்ட ஜே.எம்.1 மாஜிஸ்ட்ரேட் செந்தில்குமார், வெள்ளிக்கிழமையன்று (ஜன. 31) நேரில் பார்வையிட்டு, விசாரணை நடத்தினார்.
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி வட்டாரத்திற்கு உட்பட்டது சூரியூர் வனக்கிராமம். ஜல்லுத்துமலை, ஜருகுமலை ஆகிய இரு மலைகளுக்கு இடையே சூரியூர் எனும் சிறு கிராமம் அமைந்துள்ளது. இந்த வனக்கிராமத்தில் 77 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருவதுடன், மலையடிவாரத்தில் மலர், காய்கறி விவசாயமும் செய்து வருகின்றனர். இந்நிலையில், சேர்வராயன் தெற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட, காப்புக்காடாக அறிவிக்கப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், வனப்பகுதியை விட்டு உடனடியாக வெளியேறும்படியும் வனத்துறையினர் கூறினர்.
கடந்த 27.1.2020ம் தேதி, வனத்துறையினர் அதிரடியாக பொக்லின் இயந்திரங்களோடு சூரியூர் சென்றனர். அங்கே வனக்கிராமவாசிகள் அமைத்திருந்த சிறு குடிசைகள், கீற்று கொட்டகைகளை இடித்து அப்புறப்படுத்தினர். அரளி பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலங்கள், மஞ்சள், வெங்காயம் பயிரிட்டிருந்த விளைநிலங்களையும் நாசப்படுத்தினர். இதையடுத்து இந்த விவகாரம் பெரும் விசுவரூபம் எடுத்துள்ளது.
வனத்துறையினர் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களின் உத்தரவுகளை மீறி குடிசைகளை அகற்றியதாக சூரியூர் வனக்கிராம மக்கள் மீண்டும் சேலம் மாவட்ட நீதிமன்றத்தின் படியேற, இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராஜாராம் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவு வந்த கையோடு, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜாராம் ஜன. 28ம் தேதி சூரியூரில் நேரில் விசாரணை நடத்திவிட்டுச் சென்றார். அப்போது அவர், ஆக்கிரமிப்புகளை அகற்றலாம்; ஆனால், விளை நிலங்களையும், வீடுகளில் இருந்த பொருள்களையும் நாசப்படுத்தியது விதிமீறல் எனக்கூறினார்.
இது ஒருபுறம் இருக்க, சேலம் மாவட்ட முதலாவது குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நடுவர் (மாஜிஸ்ட்ரேட், ஜே.எம்.-1) செந்தில்குமார், ஜன. 31ம் தேதி, மாலை 04.00 மணியளவில், சர்ச்சைக்குரிய சூரியூர் வனக்கிராமத்தில் நேரில் பார்வையிட்டார்.
வனத்துறை சார்பில் தெற்கு வனச்சரகர் சுப்ரமணியம், வருவாய்த்துறை சார்பில் சேலம் வட்டாட்சியர் மாதேஸ்வரன் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், காவல்துறை ஆய்வாளர் அம்சவள்ளி ஆகியோரும் ஆய்வின்போது உடன் இருந்தனர். வனக்கிராம மக்கள் தரப்பில் சூரியூரைச் சேர்ந்த முருகேசன், அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் சந்திரசேகர், ஸாகிர் அஹ்மத், ஷாஜஹான் ஆகியோரும் உடனிருந்தனர்.
கடந்த 27ம் தேதி ஆய்வு செய்த ஓய்வு பெற்ற நீதிபதி ராஜாராம், அடுத்த முறை விசாரணைக்கு வரும்போது வனத்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தில் இருக்கக்கூடாது என்று கூறியதால், அவர்கள் தரப்பில் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே பிரச்னைக்குரிய மக்கள் சூரியூர் வனக்கிராமத்திற்குள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக இரவோடு இரவாக வனத்துறையினர், நுழைவுப் பகுதியிலேயே சோதனைச் சாவடி ஒன்றையும் அமைத்துள்ளனர். மேலும், ஊருக்குள் செல்லும் வழித்தடத்தில் ஆறு அடி ஆழத்திற்கு குழியும் வெட்டி வைத்துள்ளனர்.
சம்பவ இடங்களை பார்வையிட்ட மாஜிஸ்ட்ரேட் செந்தில்குமார், சூரியூர் வனக்கிராமம், வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெரிகிறது என்றார். அதற்கு சூரியூர் மக்கள் தரப்பு வழக்கறிஞர் ஸாகிர் அஹ்மத், 'கடந்த 2001, 2002ம் ஆண்டுகளில் வனத்துறையினரும், இந்த கிராமம் தங்கள் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது இல்லை,' என்று தெரிவித்துள்ளதாக கூறினார். பிறகு, நீதிமன்ற உத்தரவு நகல் ஒன்றை மாஜிஸ்ட்ரேட்டிடம் காட்டினார்.
அதைப் படித்துப்பார்த்த மாஜிஸ்ட்ரேட், ''வனக்கிராம மக்கள் விவசாயம் செய்து வருவதற்கோ, வீடுகள் கட்டியிருந்ததற்கோ ஆதாரங்கள் இல்லை. ஆனால் அதற்கான சில குறியீடுகள் இருப்பதாகத்தான் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதேநேரம் சர்ச்சைக்குரிய இந்த பகுதி காப்புக்காடு பகுதிதான் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. சட்டத்திற்கு உட்பட்ட இவர்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்யலாம். அதற்காக 77 குடும்பத்தினருக்கு 257 ஏக்கர் நிலத்தை வழங்க முடியாது,'' என்றார்.
வழக்கறிஞர் ஷாஜஹான், ''சூரியூர் வனக்கிராமத்தில் வனத்துறையினர் இதுவரை நான்கு முறை ஆக்கிரமிப்புகளை அகற்றி இருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் நாங்கள் நீதிமன்றத்தில் இதற்கான தடை பெற்று வந்திருக்கிறோம். ஆனாலும் வனத்துறையினர் தொடர்ந்து இவ்வாறு செய்கின்றனர்,'' என்று மாஜிஸ்ட்ரேட்டிடம் கூறினார்.
அதற்கு மாஜிஸ்ட்ரேட் செந்தில்குமார், ''நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததாகச் சொல்ல முடியாது. இவ்விவகாரத்தில் உரிய அமைப்பை நாடுங்கள் என்றுதான் சொல்லி இருக்கிறது. மேலும், சூரியூர் வனக்கிராம மக்கள் கிளெய்ம் செட்டில்மெண்ட் பெற வேண்டுமெனில், பாரஸ்ட் செட்டில்மெண்ட் அலுவலகத்தை நாட வேண்டும்.
அதற்கு மீண்டும் குறுக்கிட்ட வழக்கறிஞர் ஷாஜஹான், ''சார்... இது மூன்று அடுக்கு விசாரணை முறைகளைக் கொண்டது. முதல் அடுக்கில் வருவாய் கோட்டாட்சியர் இப்பிரச்னை குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும். அதன்பிறகுதான் நாங்கள் மாவட்ட அளவிலான, அதாவது ஆட்சியரை பார்க்க முடியும். அதன்பிறகு தமிழக அரசை நாட வேண்டும். ஆனால் இதுவரை கோட்டாட்சியரே விசாரணை நடத்தி முடிக்கவில்லை. சூரியூர் வனக்கிராமம் தொடர்பாக இதுவரை கொடுக்கப்பட்ட மனுக்கள் எதுவும் வருவாய்த்துறை வசம் இல்லை என்கிறார்கள்,'' என்று கூறினார். அதற்கு மாஜிஸ்ட்ரேட் பதில் ஏதும் சொல்லாமல், மற்றொரு இடத்திற்கு ஆய்வு செய்ய சென்றார்.
சுமார் இரண்டு மணி நேரம் ஆய்வு நடந்தது. இது தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் செந்தில்குமாரிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்க முயன்றபோது, ''சூரியூர் வனக்கிராமம் தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் நான் எதுவும் சொல்ல முடியாது,'' என்று கூறிவிட்டு கிளம்பிச் சென்றார். ஆய்வு முடிந்து அவர் காரில் ஏறி கிளம்பிச் செல்லும்போது, வனக்கிராம மக்கள் வழித்தடத்தில் திடீரென்று கீழே படுத்து புரண்டு அழுதனர். உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து சூரியூர் வனக்கிராமத்தைச் சேர்ந்த முருகேசனிடம் கேட்டபோது, ''நாங்கள் மூன்று தலைமுறைகளாக 75 ஆண்டுகளுக்கும் மேலாக சூரியூர் வனக்கிராமத்தில் வசிக்கிறோம். வன உரிமை சட்டப்படி மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடிகள் அல்லது மலைவாசிகளையோ அங்கிருந்து அப்புறப்படுத்தக் கூடாது. திடீரென்று வனத்துறையினர் இந்தப் பகுதியை காப்புக்காடாக அறிவித்து, திட்டமிட்டு எங்களை அப்புறப்படுத்த பார்க்கிறது.
நாங்கள் காலம் காலமாக வசித்து வந்த பகுதி காப்புக்காடு என்றால், அதற்கான ஆவண ஆதாரங்களைக் காட்டுங்கள் என்கிறோம். இதுவரை வனத்துறையினர் ஆதாரத்தைக் காட்ட மறுக்கின்றனர். வருவாய்த்துறையின் அடங்கல் ஆவணங்களில், ஜல்லூத்து மலை, ஜருகுமலையை குறிப்பிட சூரியூர் வனக்கிராமத்தை சுட்டிக்காட்டிதான் எல்லை வரையறை செய்திருக்கிறார்கள். ஆனால், இப்போது வருவாய்த்துறையிடம் கேட்டால் சூரியூர் என்ற கிராமமே இல்லை என்கிறார்கள். அப்படி எனில் எங்கள் கிராமம் சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டி போல காணாமல் போய்விட்டதா?
சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் 124- வது கிராமம் பனமரத்துப்பட்டி, 125- வது கிராமம் அத்திப்பட்டி, 126- வது கிராமம்தான் சூரியூர். இப்போது வருவாய்த்துறை, வனத்துறை ஆகிய இரண்டு துறைகளின் ஆவணங்களிலும் எங்கள் ஊரைக் காணவில்லை. இல்லாத ஊரில், சொந்த நாட்டில் நாங்கள் அகதிகளைப் போல் வாழ்கிறோம். எங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க அரசு உரிய தீர்வு வழங்க வேண்டும். இங்கு வசிக்கும் 77 குடும்பத்தினருக்கும் வீட்டு மனை, விவசாய நிலப்பட்டா வழங்க வேண்டும். இப்பிரச்னையில் சுமூக தீர்வு கிடைக்கும்வரை நாங்கள் இங்குள்ள எல்லை பிடாரி அம்மன் கோயில் சத்திரத்தில்தான் தங்கியிருப்போம்,'' என்றார்.
சூரியூர் கிராம மக்கள் அங்குள்ள எல்லை பிடாரி அம்மனை வழிபட்ட பிறகே எந்த ஒரு பணிகளையும் துவங்குகின்றனர். உள்ளூர் மக்கள் பிடாரி அம்மனை சக்தி வாய்ந்த தெய்வமாக கருதுவதோடு, என்ன வேண்டுதல் வைக்கிறோமோ அதை கட்டாயம் பிடாரி அம்மன் நிறைவேற்றித் தருவாள் என்கிறார்கள். சூரியூர் பிரச்னையிலும் சுமூக தீர்வு கிடைக்கட்டும்.