புதுச்சேரி அருகில் உள்ள ஆரோவில் சர்வதேச நகரத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி புதுச்சேரிக்கு வந்த மத்திய பாதுகாப்பத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அரவிந்தர் ஆசிரமத்தில் தியானம் மேற்கொண்டார்.
பின்னர் அங்குள்ள சர்வதேச பள்ளிக்கு சென்ற அவர் அங்குள்ள மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், “ மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மக்கள் நல திட்டங்களை கண்டு எதிர்கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவது அரசின் கடமை. அதற்கானதே மத்திய அரசின் இந்த இடைக்கால பட்ஜெட். விவசாயிகளுக்கு அந்தந்த மாநில அரசுகளும் உதவிகள் வழங்கினாலும் மத்திய அரசு அவர்களுக்கு கூடுதலாக இந்த உதவிகளை வழங்குகிறது” என்றார். அவரிடம் செய்தியாளர்கள்,
ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக கேட்டதற்கு, “ ரபேல் விவகாரம் ஆதாரமற்றது. இது தொடர்பாக அனைத்து ஆதாரங்களும் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. ரபேல் தொடர்பாக குற்றம் சாட்டுபவர்கள் திரும்ப திரும்ப பொய்யையே கூறுகின்றனர். தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று தெரிவித்தார்.