சேலத்தில், பிரபல ரவுடியைக் கொன்ற கும்பலிடம் இருந்து இதுவரை 22 வீச்சரிவாள்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (35). பிரபல ரவுடியான இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்பட மொத்தம் 22 குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த 2020- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22- ஆம் தேதி இரவு, அவரை வீடு அருகே காரில் வழிமறித்த ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்ததது. இந்த கொலையில் மொத்தம் 25- க்கும் மேற்பட்ட உள்ளூர், வெளியூர் ரவுடி கும்பல் ஈடுபட்டுள்ளனர்.
செல்லத்துரை கொலை வழக்கில் இதுவரை 19 பேர் சரணடைந்துள்ளனர். அவர்களில் முதல்கட்டமாக 15 பேரை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி முடித்துள்ளனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட ரவுடிகளில் முக்கியமானவரான சிலம்பரசன் உள்ளிட்ட 4 பேரை தனியாகக் காவலில் எடுத்து காவல்துறை விசாரித்தது. நான்கு பேரிடமும் விசாரணை முடிந்த நிலையில், அனைவரையும் திங்களன்று (ஜன. 11) சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட கும்பலிடம் இருந்து இதுவரை 9 மோட்டார் சைக்கிள், ஒரு கார், கொலைக்கு பயன்படுத்திய 22 வீச்சரிவாள், கத்தி ஆகியவற்றைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த கொலையில் தொடர்புடைய வேலூரைச் சேர்ந்த முக்கிய ரவுடியான வசூர் ராஜாவை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் வேலூர், சென்னைக்கு விரைந்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி ஜானின் தந்தை சாமிதாஸ், தாய் கனகா, சண்முகம் உள்ளிட்ட சிலரையும் தேடி வருகின்றனர்.