சேலத்தில், போலி மருத்துவர் மூலம் கரோனாவுக்கு சிகிச்சை அளித்த விவகாரத்தில், மறு உத்தரவு வரும் வரை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது என்று தனியார் மருத்துவமனைக்கு அதிரடியாக தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
சேலம் கொண்டலாம்பட்டி - பெங்களூரு புறவழிச்சாலை அருகே, பிரியம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என்ற பெயரில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. அரசு அனுமதியின்பேரில், இம்மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இம்மருத்துவமனையில், சேலத்தை சேர்ந்த மோகனசுந்தரம் (54) என்பவருக்கு கரோனா காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சில நாள்களுக்கு முன்பு, திடீரென்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிகிச்சையில் இருக்கும் கரோனா நோயாளிகள் உயிரிழந்தால் இறந்தவர் தொடர்பான விவரங்கள், அவருக்கு வேறு ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் இருந்திருந்தால் அதன் விவரங்கள், சிகிச்சை அளித்த மருத்துவர் உள்ளிட்ட விவரங்கள் மாவட்ட சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகம், ஐசிஎம்ஆர் ஆகிய நிர்வாகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மோகனசுந்தரத்திற்கு, நவீன் என்பவர் சிகிச்சை அளித்துள்ளார். விசாரணையில், அவர் எம்பிபிஎஸ் படிப்பை முழுமையாக நிறைவு செய்யவில்லை என்பது தெரிய வந்தது. இதுகுறித்து சேலம் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப்பணிகள் துறை இணை இயக்குநர் மலர்விழி நேரில் விசாரணை நடத்தினார். ஆனால், நவீன் முறையாக விளக்கம் அளிக்கவில்லை என்று தெரிகிறது. எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள், சிஆர்ஆர்ஐ எனப்படும் ஓராண்டு காலம் பயிற்சி மருத்துவராக பணியாற்றுவது கட்டாயம். ஆனால் நவீன் அவ்வாறு பணியாற்றாமலேயே கரோனா சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
நோய்த்தொற்று காலத்தில் முறையாக மருத்துவப் படிப்பை முடிக்காத ஒருவர், சிகிச்சை அளிப்பது என்பது மருத்துவத்துறை அறத்திற்கு எதிரானது. இதையடுத்து, பிரியம் மருத்துவமனை இனி கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது என்றும், அதற்காக வழங்கப்பட்டு இருந்த அரசு அனுமதியும் உடனடியாக ரத்து செய்தும் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப்பணிகள் துறை திங்களன்று (செப். 21) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நாம் மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப்பணிகள் அதிகாரிகளிடம் கேட்டபோது, ''பிரியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கரோனா நோயாளி ஒருவர் இறந்துவிட்டார். அதுகுறித்த விசாரணையின்போதுதான், மருத்துவர் நவீன் என்பவர் போதிய கல்வித்தகுதி இல்லாமல் சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. அவருக்கு மருத்துவருக்கான பதிவெண்கூட போலியாக இருப்பது தெரிய வந்தது. அவர்தான் இறந்துபோன நோயாளிக்கும் சிகிச்சை அளித்து வந்துள்ளார். அதனால் அந்த மருத்துவமனை, இனி கரோனா நோயாளிகளுக்கு அட்மிஷன் வழங்கவோ, சிகிச்சை அளிக்கவோ கூடாது. அதற்கான அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது,'' என்றனர்.
இது ஒருபுறம் இருக்க, கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் போலி மருத்துவர் நவீன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது சம்பந்தமாக கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் புஷ்பராணியிடம் கேட்டபோது, ''கரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த நவீன் என்பவர், மருத்துவர் படிப்பை நிறைவு செய்யவில்லை என்று புகார் வந்துள்ளது. அவர், எந்த கல்லூரியில், எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை படித்தார் என்பது உள்ளிட்ட விவரங்களை விசாரித்து வருகிறோம்,'' என்றார்.
நவீன் மீதான புகாரின் பேரிலேயே பிரியம் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் கரோனா சிகிச்சைக்காக அதிக கட்டணம் வசூலித்ததால்தான் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் பரவின. இது தொடர்பாக அங்கு சிகிச்சை பெற்ற கரோனா நோயாளி ஒருவரிடம் விசாரித்தபோது, நோயின் தீவிர தன்மைக்கு ஏற்ப சிகிச்சையும், அதற்குரிய கட்டணமும் மாறுபடுகிறது என்றார்.
புகாருக்குரிய போலி மருத்துவர் நவீன் ஒரு நாளைக்கு 2500 ரூபாய் வீதம் மருத்துவர் கட்டணமாக பெற்றுள்ளார். நாளொன்றுக்கு உணவுக்கட்டணம் 300 ரூபாய், உடல் முழுவதும் மூடியிருக்கும் 'பிபிஇ கிட்' உடை ஒரு செட்டுக்கு 350 ரூபாய் வீதம் 30 செட்டுக்கு 10,500 ரூபாய், ஆய்வகத்திற்கு 13,277 ரூபாய், மருந்தக கட்டணமாக 85 ஆயிரம் ரூபாய், இன்னொரு மருத்துவருக்கான கட்டணமாக நாளொன்றுக்கு தலா 2500 ரூபாய் என 7 நாள்கள் சிகிச்சை பெற்ற ஒரு நோயாளியிடம் 1.80 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாக, அங்கு சிகிச்சை பெற்ற மற்றொரு நோயாளி கூறினார்.
எனினும், இம்மருத்துவமனையைக் காட்டிலும் சேலத்தில் 10 நாள் சிகிச்சைக்கு 6 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளும் இருக்கின்றன என்றும் சில மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கரோனா நோயாளிக்கு போலி மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதும், அதனால் தனியார் மருத்துவமனைக்கு கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டதும் சேலத்தில் மருத்துவத்துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.