சேலம் மாநகர பகுதிகளில் இனி சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் இறைச்சிக் கடைகளைத் திறக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
கரோனா தொற்று அபாயத்தால் தமிழகம் முழுவதும் மார்ச் 24- ஆம் தேதி மாலை 06.00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சி.ஆர்.பி.சி. 144- வது பிரிவின் கீழ் பொதுவெளியில் 5- க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றாகக் கூடவும் தடை விதிக்கப்பட்டது.
ஒரு வாரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த தடை உத்தரவில் சிறு தளர்வு அளித்து, மே 3- ஆம் தேதி (ஞாயிறு) இறைச்சிக்கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 9 நாள்களாக இறைச்சி உண்ணாமல் ஏமாற்றத்தில் இருந்த அசைவப் பிரியர்கள் அன்று ஒரே நாளில் கசாப்புக் கடைகளில் குவிந்தனர்.
கடை திறக்கப்பட்ட அன்று சேலம் மாநகரில் குகை, செவ்வாய்ப்பேட்டை, அம்மாபேட்டை, சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இறைச்சிக்கடைகளில் சமூக இடைவெளியின்றியும், முகக்கவசம் அணியாமலும் முண்டியடித்துக் கொண்டு நின்றனர். சமூக விலகல் விதியைப் பின்பற்றாத இறைச்சிக் கடைகளை சேலம் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக மூடி சீல் வைத்தது.
அதன்பிறகு மாநகருக்கு வெளியே கருப்பூரில் புதிதாக இறைச்சி சந்தையை உருவாக்கினாலும் கூட பல கி.மீ. தொலைவுக்குச் சென்று ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சியை வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டவில்லை. அதையடுத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் தவிர மற்ற நாள்களில் இறைச்சிக்கடைகளைத் திறக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்நிலையில், இறைச்சிக் கடைக்காரர்கள் வார நாள்களைக் காட்டிலும் சனி, ஞாயிறு ஆகிய இறுதி நாள்களில் மட்டுமே இறைச்சி வியாபாரம் களைகட்டும் என்பதால், அந்த நாள்களில் மீண்டும் கடைகள் நடத்தவும், வாழ்வாதாரம் மேம்படவும் அனுமதிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இக்கோரிக்கை மனுக்களைப் பரிசீலித்த மாநகராட்சி நிர்வாகம், மீண்டும் சனி, ஞாயிறு கிழமைகளில் இறைச்சிக் கடைகளை நடத்த அனுமதி அளித்துள்ளது. அதேநேரம் சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ''இறைச்சிக் கடைகளில் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இறைச்சி வாங்கச் செல்லும் வாடிக்கையாளர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாத நபர்களுக்கு இறைச்சி விற்பனை செய்யக்கூடாது.
வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 3 அடி தூரம் சமூக இடைவெளிவிட்டு நிற்க வேண்டும். காலை 05.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை இறைச்சிக் கடைகள் செயல்படலாம். பாலிதீன் பைகளைத் தவிர்த்துவிட்டு, பாத்திரங்களில் மட்டுமே பார்சல் வழங்க வேண்டும். இந்த நிபந்தனைகளை மீறி செயல்படும் இறைச்சிக் கடைகள் உடனடியாக மூடி சீல் வைக்கப்படும். அபராதமும் வசூலிக்கப்படும்'' என்றனர்.