சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கடம்பூர் என்ற கிராமத்தில் தனியார் பட்டாசு குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது. இத்தகைய சூழலில் தான் இந்த குடோனில் இன்று (16.05.2024) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி ராஜ மாணிக்கம் என்ற தொழிலாளி உயிரிழந்துள்ளார். மேலும் இரு பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகக்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தப் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆறுதல் மற்றும் இரங்கல்களை தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், கடம்பூர் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (16.5.2024) மாலை சுமார் 05.00 மணியளவில் எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், கூலமேடு கிராமத்தைச் சேர்ந்த ஆண்டி என்பவர் மகன் ராஜமாணிக்கம் (வயது 45) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 9 ஆம் தேதி (09.05.2024) ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஒரு பெண் உட்பட 10 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.